Random image

அமித்ஷா – நிதிஷ்குமார் சந்திப்பு: தொகுதி உடன்பாடு முடிவானது?

பாட்னா:

பாராளுமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் இன்று பீகார் சென்றுள்ளார். அங்கு மாநில முதல்வரும், கூட்டணி கட்சி தலைவருமான நிதிஷ்குமாரை சந்தித்து பேசி வருகிறார்.

சமீபத்தில் தமிழகம் வந்திருந்த அமித்ஷா, ஆதரவு கட்சியான அதிமுகமீது சேற்றை வாரி வீசி சென்றார்.தமிழகம்தான் ஊழல் நிறைந்த மாநிலம் என்று குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார். ஆனால், இதுகுறித்து எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காமல் எடப்பாடி தலைமையிலான அரசு மவுனம் சாதித்து வருகிறது. இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்த நிலையில், அமித்ஷா இன்று பீகார் சென்றுள்ளார். அங்கு கூட்டணி கட்சி தலைவரான நிதிஷ்குமாருடன், வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டதாக உறுதிப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீகாரில் ஏற்கனவே நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின்  ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன- மாநில முதல்வராக நிதிஷ்குமாரும், துணைமுதல்வராக லாலுவின் மகனும் ஆட்சி செய்து வந்தனர்.

இதற்கிடையில் கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக, கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அடுத்த நாள், பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைத்தார். இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இத்ந நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதிஷ்குமார், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். இதன் காரணமாக பாஜக, நிதிஷ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று காலை அமித்ஷா பீகார் தலைநகர் பாட்னா சென்றுள்ளார். இன்று காலை முதல்வர் இல்லத்துக்கு சென்று நிதிஷ்குமாரை சந்தித்த அமித்ஷா, அங்கு காலை உணவருந்தினார்.

அதைத்தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் வியூகம் மற்றும்  தொகுதி பங்கீடு குறித்து இரு தலைவர்களும் பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சு வார்த்தையின்போது,  துணை முதல்வரும், மாநில பாஜக தலைவருமான  சுஷில் குமார் மோடியும் உடனிருந்தார். பேச்சில், இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, அங்கிருந்து சென்ற அமித்ஷா, அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி உளளார். தொடர்ந்து  பீகார் மாநில பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்துகிறார்.

பாராளுமன்ற  தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது, பீகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 31 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.