மும்பை: ஆட்சியமைக்க வருமாறு மகாராஷ்டிர ஆளுநர் விடுத்த அழைப்பை, பாஜக நிராகரித்து இருக்கிறது.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

பெரும்பான்மையை நிரூபிக்க 145 இடங்கள் தேவை என்பதால், பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதலமைச்சர் பதவி, சுழற்சி முறையில் ஆட்சி கோரிக்கைகளை வைத்து சிவசேனா நெருக்கடி கொடுத்தது.

சிவசேனாவின் கோரிக்கைகளை பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை. முதலமைச்சராக இருந்த பட்னவிசும் அதில் இருந்து விலகினார். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து அளித்தார்.

மாற்று ஏற்பாடு செய்யும் வரை பதவியில் இருக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார். மாநிலத்தில் ஆட்சி அமைக்க பட்னவிசுக்கு அழைப்பு விடுத்த ஆளுநர், நாளைக்குள் (நவ.11) பெரும்பான்மையை நிரூபிக்க கெடுவும் விதித்திருந்தார்.

இந் நிலையில் ஆளுநரின் கோரிக்கையை பாஜக நிராகரித்து உள்ளது. மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா பாஜக மூத்த தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் இதை அறிவித்து உள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: மக்களுக்கு எங்களுக்கு நல்ல தீர்ப்பை தேர்தலில் வழங்கி உள்ளனர். அதனால் தான் ஆளுநர் எங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்திருக்கிறார்.

கூட்டணி ஆட்சி தான் அரசமைக்க வேண்டும் என்று மக்கள் தீர்ப்பு தந்திருக்கின்றனர். ஆனால், ஆட்சியமைக்க சிவசேனா எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இருப்பினும், அதை நாங்கள் புறக்கணிக்கவில்லை என்றார்.

ஆட்சியமைக்க ஆளுநர் விடுத்த அழைப்பை பாஜக நிராகரித்துள்ளதால் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பதை ஆளுநர் முடிவு செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.