மேனேஜருக்கு- ‘சீட்’ முதலாளி-‘அவுட்’ அத்வானிக்கு இழைக்கப்பட்ட அநீதி

வாஜ்பாயும்.அத்வானியும் பா.ஜ.க.வின் ‘இரட்டை குழல் துப்பாக்கிகள்’.

ராமர் பெயரை சொல்லி ஒற்றை ஆளாக ரதம் ஓட்டி-துவண்டு கிடந்த பா.ஜ.க.வுக்கு சுவாசம் கொடுத்தவர்-அத்வானி.

இந்த தேர்தலில் போட்டியிட அவருக்கு மோடியும் அமீத்ஷாவும் டிக்கெட் வழங்கவில்லை.

காரணம் –அத்வானி கிழவர் ஆகிவிட்டாராம்.

75 வயது ஆனவர்களுக்கு கட்சியிலும் ,ஆட்சியிலும் பொறுப்பு கிடையாது என்பது மோடியின் பாலிசி. அதனை சொல்லி- கடந்த முறை அத்வானிக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது.

இந்த முறை எம்.பி.பதவியே இல்லை என்று சொல்லி விட்டார்- மோடி.

அத்வானிக்கு வயது 91

1970களில் ராஜ்யசபா உறுப்பினராக நாடாளுமன்றத்தில் முதன் முறையாக அடி எடுத்து வைத்தார். 1991ல் குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். 96ல் வாஜ்பாய்க்கு அந்த தொகுதியை  விட்டுக்கொடுத்தார்.

1998 ல் மீண்டும் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.அன்று முதல் இன்று வரை அத்வானி காந்திநகர் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார்.

காந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு தேர்தலின் போது மேனேஜராக பணியாற்றியவர்-அமீத்ஷா. இன்றைக்கு காந்திநகர் தொகுதி- அமீத்ஷாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அத்வானி போல்- பா.ஜக.வை வடிவமைத்த மற்றொரு சிற்பியான முரளி மனோகர் ஜோஷிக்கும் வயதை காரணம் காட்டி டிக்கெட் கொடுக்கவில்லை.

காந்திநகர் தொகுதி-பா.ஜ.கவின்  கோட்டை. இதுவரை நடந்த14 தேர்தல்களில் 9 முறை பா.ஜ.க .வென்ற தொகுதி அது.

கடந்த தேர்தலில் அத்வானி சுமார் நான்கரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அந்த தொகுதியில் வெற்றி பெற்று இருந்தார்.

–பாப்பாங்குளம் பாரதி

Leave a Reply

Your email address will not be published.