சென்னை:  
மாயாவதி பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த பா.ஜ.  தலைவரை உடனே கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

ஜெயலலிதா மாயாவதி
ஜெயலலிதா                                                                   மாயாவதி

உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் கட்சியின் தலைவருமான மாயாவதி பற்றி, உ.பி மாநில பா.ஜ. துணைத்தலைவர் தயாசங்கர் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த விமர்சனம் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் விமர்சனமானது.
இதுகுறித்து ஜெயலலிதா: மாயாவதியை விமர்சிக்க தயா சங்கர் சிங் பயன்படுத்திய வார்த்தைகள் கண்டனத்துக்குரியது என்றும். தயா சங்கரின் விமர்சனம் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் இழுக்கைத் தேடித் தருவதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அரசியலில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பதை ஏற்க முடியாது என்றும், குஜராத்தில் சில நாட்களுக்கு முன்பாக நடந்த நிகழ்வுகள் குறித்து மாயாவதி கண்டித்து வருவதாலோ என்னவோ, உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.கவின் துணைத் தலைவர் தயா சங்கர் சிங், அவரை தரம் தாழ்ந்து விமர்சித்திருப்பதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
அரசியலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் இது போன்ற கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அவ்வப்போது நடப்பதாகவும் தனது அரசியல் வாழ்விலும் இதுபோன்ற துன்பங்களை அனுபவித்திருப்பதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார். வார்த்தை சவுக்கடிகளால் தாக்கப்பட்ட மாயாவதியின்பால் தனது உள்ளம் கசிந்து உருகுவதாகவும் பெண் அரசியல்வாதிகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் இத்துடனாவது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
உ.பி. மாநில  சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, பா.ஜ.க.வை சேர்ந்த தயா சங்கர் சிங், சட்டமன்ற தொகுதிகளை யார் அதிக விலைக்கு கேட்கிறார்ளோ, அவர்களுக்கு மாயாவதி  தொகுதிகளை விற்பனை செய்து வருகிறார்  என்று பாலியல் தொழிலாளர்களுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்தன.
நாடாளுமன்ற அவையில்  நிதி அமைச்சர்ய  அருண் ஜேட்லி,  தயா சங்கர் சிங்கின் கருத்துக்கு மன்னிப்புக் கோரினார். இது குறித்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். விவகாரம் பூதாகரமானதையடுத்து,  தயா சங்கர் சிங்கும் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். அவரை கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து பா.ஜ.க. நீக்கியுள்ளது.
இவரது பேச்சை கண்டித்து இன்று உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினிர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.