கொல்கத்தா:

மத்திய பாதுகாப்புப் படையினரின் போர்வையில் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்த வந்திருக்கலாம் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, மத்திய பாதுகாப்புப் படையினரின் சீருடையில் வந்து மேற்கு வங்கத்தில் பாஜகவினரும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் தேர்தலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றேன்.

இதற்காக பாதுகாப்புப் படையினரை நான் அவமதிப்பதித்தாக அர்த்தம் ஆகாது. கடால் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பாரதி கோஷின் பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மத்திய பாதுகாப்புப் படையை சேர்ந்தவர் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

வரிசையில் நிற்கும் வாக்காளர்களிடம் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு மத்திய பாதுகாப்புப் படையினர் வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.

இத்தகைய செயலை பாதுகாப்புப் படையினர் எப்படி செய்வார்கள்? இதற்காக ஓய்வு பெற்ற அதிகாரிகளை மோடி அரசு பயன்படுத்துகிறது. தாங்கள் நினைத்ததை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதைச் செய்வதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும். உண்மையிலேயே மத்திய பாதுகாப்புப் படையினர் மோடிக்கு வாக்கு கேட்டிருந்தால், ஆட்சி மாற்றம் வரும்போது என்ன செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

மேற்கு வங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த 6&வது கட்ட வாக்குப் பதிவில் மத்திய பாதுகாப்புப் படையின் 770 கம்பெனிகள் பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டன.