பெங்களூரு: போதை பொருள் வழக்கில் கைதான கன்னட நடிகை ராகினி திவேதி பாஜகவில் உறுப்பினராக இல்லை என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது தெரியவந்தது.

விசாரணையை தொடர்ந்து, கன்னடம்,தமிழ் திரை உலகில் பிரபல நடிகையாக இருக்கும் ராகினி திவேதியின் வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். போதைப்பொருட்கள் பயன்படுத்தியது, அவற்றை விற்கும் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் போலீசாருக்கு சிக்கின.  இதையடுத்து, அண்மையில் ராகினி திவேதி கைது செய்யப்பட்டார்.

கடந்த காலங்களில் பாஜகவில் உறுப்பினராக இருந்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது.  இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந் நிலையில், ராகினி திவேதி எங்கள் கட்சியில் உறுப்பினராக இல்லை என்று கர்நாடகா பாஜக மறுத்துள்ளது.

இதுபற்றி அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கேப்டன் கணேஷ் கர்னிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:  நடிகை ராகினி திவேதி பாஜக உறுப்பினர் இல்லை.  கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நூற்றுக்கணக்கான பிரபலங்கள் எங்கள் கட்சிக்கு பிரசாரம் செய்தனர். அனைத்துமே அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் இருநத்து,  அவர்களில் ராகினியும் ஒருவராக கூட இருந்திருக்கலாம். அவருக்கு கட்சியில் இருந்து பொறுப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.