டெல்லி:

டெல்லி சட்டமன்றத்தில் கவுரக்ஷா என்ற பெயரில் விசாரணை இல்லாமல் வன்முறை கும்பலால் நடத்தப்படும் கொலை சம்பவங்களை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக சட்டமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் ஒரு பகுதி என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாஜ உறுப்பினர்கள் வலியுறுத்தினர். உண்மையை திசை திருப்ப பாஜக.வினர் இவர் செயல்படுவதாக ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

துணை முதல்வர் மனிஷா சிசோடியா கூறுகையில்,‘‘ பாஜ பசுக்களை மக்களின் வீட்டு பிரிட்ஜிலும், சாப்பாட்டு தட்டிலும் இருக்கிறதா என்று தான் பார்க்கிறது. டெல்லி தெருக்களில் சுற்றிதிரியும் பசுக்கள் பாலிதீன் பைகளை சாப்பிட்டுக் கொண்டும், விபத்தில் சிக்குவதும் அவர்களது கண்களுக்கு தெரியவில்லை.
மோடி வெளிநாடுகளுக்கு சென்று மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்களை கட்டி அணைத்துக் கொள்கிறார். ஆனால் இந்தியாவில் மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்களை கொலை செய்கின்றனர்’’ என்றார்.

இவர் பேசிய போது பாஜ உறுப்பினர் மன்ஜிந்தர் சிங்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் காரசாரமான வார்த்தைகளால் மோதிக் கொண்டனர்.

ஆம்ஆத்மி தலைவர் அல்கா லம்பா கூறுகையில், ‘‘கவ் ரக்ஷகாஸ் மற்றும் பாஜ அமைச்சர் கிரன் ரிஜிஜூ ஆகியோர் மாட்டு இறைச்சி சாப்பிடுகிறார்கள். தேர்தல் ஆதாயம் தேடுவதற்காக தேர்தல் நடக்க இருக்கும் பகுதிகளான வட கிழக்கு மாநிலங்களான நாகாலாந்து போன்ற மாநிலங்களில் மாட்டு இறைச்சிக்கு தடையில்லை என்று பாஜ தலைவர்கள் கூறுகின்றனர். இது அப்பட்டமான போலித் தனம்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்காமல், இது மகாத்மா காந்தியின் தேசம் என்று பிரதமர் கூறுகிறார். அப்புறம் ஏன் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியவில்லை’’ என்றார்.

டெல்லி சட்டமன்றத்தில் சுமார் 2 மணி நேரம் இது தொடர்பான விவாதங்கள் நடந்தது. மோடியின் செயல்படாத தன்மை மற்றும் இரு நிலைப்பாடு ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

சபாநாயகர் ராம் நிவாஸ் பேசுகையில்,‘‘ ஏன் ஒருவரும் பாகிஸ்தான் வசம் இருக்கும் காஷ்மீர் குறித்து பேசுவதில்லை. சீனாவில் இருந்து 42 சதவீத இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கிறது.

ஆனால் சுவதேசி குறித்து நீண்ட நேரம் பேசுகிறார்கள். நானும் 40 ஆண்டுகள் ஆர்எஸ்எஸ்.ல்
பணியாற்றியுள்ளேன். அது எனக்கு இப்போது வலிக்கிறது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம் தான் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றுகிறேன்’’ என்றார்.