மும்பை

காராஷ்டிராவில் ஆட்சி அமைக்க அஜித் ப்வார் ஆதரவைக் கோரியது தேவையற்றது என  பாஜக மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று திடீரென பாஜகவுக்கு ஆதரவு அளித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராகவும் பதவி ஏற்றனர்.   பாஜக ஆட்சி அமைத்ததற்கு சிவசேனா, தேசியவாத காக்கிரச், மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கில் இன்று மாலை பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.  ஆனால் அஜித் பவார் திடீரென துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்து தாம் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்படப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.    அதனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதை அறிந்த தேவேந்திர பட்நாவிஸ் ராஜினாமா செய்தார்.

இதற்கிடையே விதர்பா நீர்ப்பாசன திட்டத்தில் அஜித் பவார் தொடர்பான ரூ.72000 கோடி மதிப்பிலான 9 ஊழல் வழக்குகளை மகாராஷ்டிர மாநில ஊழல் ஒழிப்புத் துறை ரத்து செய்தது.  இந்த வழக்குகளில் போதிய ஆதாரம் இல்லாததால் இவ்வழக்குகள் முடித்து  வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பாஜக மூத்த தலைவரான ஏக் நாத் கட்சே, “ அஜித் பவார் மிகப் பெரிய அளவிலான நீர்ப்பாசன திட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களில் தொடர்புடையவர் ஆவார்.   அப்படிப்பட்ட ஊழல் பேர்வழியின் ஆதரவைக் கோரி பாஜக ஆட்சி அமைத்தது தேவையற்றதாகும்.   அவருடைய ஆதரவை பாஜக ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது என்பதே எனது விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.  இது பாஜக தரப்பில் கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.