ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக காதுவா மாவட்டத்தில் பேரணி நடந்தது.

இதில் மாநில பாஜக அமைச்சர்கள் 2 பேர் கலந்துகொண்டனர். இதற்கு ஆளும் பிடிபி கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் பாஜக, பிடிபி கூட்டணி முறியும் நிலை உருவானது. இதை தொடர்ந்து மேலிட உத்தரவுப்படி பாஜக அமைச்சர்கள் 2 பேரும் ராஜினாமா செய்தனர்.

பதவி விலகிய சந்தர் பிரகாஷ் கங்கா இன்று கூறுகையில், ‘‘ பேரணியில் கலந்து கொள்ள பாஜக தான் எங்களுக்கு அறிவுரை வழங்கியது. மாநில தலைவடர் சாத் சர்மா தான் எங்களை பேரணிக்கு அனுப்பி வைத்தார். அதன் பேரில் தான் கலந்துகொண்டோம்.

தற்போது கட்சியின் பெயரை காப்பாற்றுவதற்காக நாங்கள் பதவியை தியாகம் செய்துள்ளோம். இதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான். நாங்களும் மக்களிடம் கேட்டபோது விசாரணை நடத்தும் அதிகாரிகள் 3 முறை மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தான் மக்கள் கேட்டுக் கொண்டனர். இதன் அடிப்படையில் தான் பேரணியில் கலந்துகொண்டோம்’’ என்றார்.