ராமர் கோவிலை பின்னுக்கு தள்ளி பாலகோட் தாக்குதலை முன் நிறுத்தும் பாஜக

டில்லி

ராமர் கோவில் விவகாரம் தொடங்கி பல்லாண்டுகளுக்கு பிறகு பாஜக தனது தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் அதை குறிப்பிடாமல் உள்ளது.

சுமார் 30 வருடங்களுக்கு முன்பு அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் உள்ள பாபர் மசூதியை அகற்றி கோவில் கட்ட உள்ளதாக பாஜக அறிவித்தது. அதை ஒட்டி நாடெங்கும் இருந்து பூஜிக்கப்பட்ட கற்கள் அயோத்யாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது பாஜக நடத்திய ரத யாத்திரையில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அன்று முதல் பாஜக தனது ராமர் கோவில் அமைப்பு குறித்து மாறாத கருத்தை கொண்டுள்ளது.

இது வரை எந்த ஒரு பிரதமரும் கடந்த 1989 க்குப்பிறகு அயோத்திக்கு சென்றதில்லை. கடந்த 1989 ஆம் ஆண்டு ராகுல் காந்தி தனது தேர்தல் பிரசாரத்தை அயோத்தி நகரில் நடத்தினார். அங்குள்ள மக்கள் இதுவரை மோடி அயோத்திக்கு வராததை ஒரு குறையாக சொல்கின்றனர். அதற்கேற்றார் போல் பாஜக தனது ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் ராமர் கோவில் அமைப்போம் என வாக்குறுதி அளித்து வந்த போதிலும் மோடி அங்கு செல்லாதது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் பிரசாரத்தில் ராமர் கோவில் பற்றி யாரும் குறிப்பிடுவதில்லை. ஒவ்வொரு முறையும் ”அமைப்போம், அதே இடத்தில் கோவில் அமைப்போம்” என ஸ்ரீராம நவமி தினத்தன்று கோவில் முன் கூடி பாஜகவினர் கோஷமிடுவது வழக்கமாகும். ஆனால் இன்று அது போல எவ்வித நிகழ்வும் நடைபெறவில்லை என உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ராமர் கோவில் விவகார பின்னடைவு கடந்த சட்டப்பேரவை இடைத் தேர்தலில் யோகியின் கோரக்பூர் தொகுதி தோல்விக்கு பிறகே ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் தலித் மற்றும் இஸ்லாமியர் வாக்குகளைப் பெற ராமர் கோவில் விவகரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி இந்துக்களின் வாக்குகளை கவர பாலகோட் தாக்குதலை புதிய ஆயுதமாக பாஜக பயன்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.