டில்லி

சென்ற முறை அமைச்சரவையில் இருந்தவர்களில் சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு பாஜக மீண்டும் அமைச்சராக வாய்ப்பளிக்கவில்லை.

கடந்த 2014 ஆம் வருடம் பாஜக ஆட்சியை பிடித்த போது அமைச்சராக பதவி ஏற்றவர்கள் பலர் அளித்த கருத்துக்கள் சர்ச்சைகளுக்கு உள்ளாகின.   அதே நேரத்தில் பல அமைச்சர்கள் எவ்வித சர்ச்சைகளிலும் சிக்காமல் கவனமாக பணி ஆற்றி உள்ளனர்.   அமைச்சர்களில் குறிப்பாக கர்நாடகாவின் அனந்தகுமார் ஹெக்டே, உத்திர பிரதேசத்தின் சத்யபால் சிங் மற்றும் மேனகா காந்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.

 

அனந்தகுமார் ஹெக்டே மத்திய இணை அமைச்சராக இருந்த போது பலமுறை தனது கருத்துக்களால் சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கிறார்.  அவர், “மதசார்பின்மை என்பது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதாக சிலர் சொல்கின்றனர்.   அது அங்கு உள்ளதால் தான் நாங்கள் அதை மதிக்கிறோம்.

 

தற்போது கூட்டணி இல்லை என்றால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி இருப்போம்.   விரைவில் அந்த மாறுதலைக் கொண்டு வருவோம்.   அரசியமைப்பு சட்டம் பலமுறை மாற்றப்பட்டுள்ளது.   இன்னொரு முறை மாற்றலாம்” என தெரிவித்தார்.  அது சர்ச்சையை உண்டாக்கியதால் ஹெக்டே மன்னிப்பு கேட்டார்.  அதை தொடர்ந்து பல சர்ச்சைகளில் ஹெக்டே சிக்கி உள்ளார்.

 

முன்னாள் மும்பை காவல்துறை ஆணையரும், மத்திய அமைச்சருமான சத்யபால் சிங், “பரிணாம வளர்ச்சி தத்துவம் என்பதே மிகவும் தவறானதாகும்.  இதை ஏற்கனவே பதினைந்து பிரபல விஞ்ஞானிகளும் கூறி உள்ளனர். டார்வின் கூறியபடி குரங்கிலிருந்து மனிதன் வந்ததாக கூறியது மிகவும் தவறானதாகும்   அதை பாட திட்டங்களில் இருந்து நீக்க வேண்டும்” என கூறி சர்ச்சையை உண்டாக்கினார்.

 

முந்தைய மத்திய அமைச்சரான மேனாக காந்தி பலமுறை சர்ச்சையில் சிக்கி உள்ளார். சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தின்  போது இஸ்லாமியர்கள் பகுதியில் மேனகா, “எனது வெற்றி ஏற்கனவே எனது ஆதரவாளர்களால் நிர்ணயிக்கப்பட்டு விட்டது.  ஆனால் அதில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.   அப்படி இல்லை எனில் எதற்காகவும் இஸ்லாமியர்கள் என்னிடம் உதவி கேட்க கூடாது” என பேசியது சர்ச்சை ஆனது.

 

இம்முறை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பாஜக அமைச்சரவை நேற்று பதவி ஏற்றது.  மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார்.   அமைச்சரவையில் மொத்தம் 54 பேர் இடம் பெற்றுள்ளனர்.   ஆனால் அனந்தகுமார் ஹெக்டே, சத்யபால் சிங், மற்றும் மேனகா காந்திக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை.