பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பாஜக மீண்டும் பேரத்தை ஆரம்பித்து இருப்பதாக அம்மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து இருக்கிறார்.

கர்நாடகாவில் வரும் 5ம் தேதி 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கிறது. அதன் முடிவுகள் அம்மாநில அரசை பெரிதும் தாக்கும் என்று கருதப்படுகிறது.

இந் நிலையில் வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் இருக்கும் முன்பு, காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக வலைவீசுவதாக அக்கட்சியின் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறியிருக்கிறார்.

அவர் மேலும் தெரிவித்து இருப்பதாவது: என்னிடம் சில எம்எல்ஏக்கள் வந்தனர். தமது கட்சிக்கு வந்துவிடுமாறு பாஜக ஆசை காட்டுவதாக கூறினர். பாஜகவை நான் எச்சரிக்கிறேன்.

மீண்டும் ஆபரேஷன் கமலா என்ற திட்டத்தை கையில் எடுத்தால் மக்கள் உங்ககளை (பாஜக) மன்னிக்க மாட்டார்கள். மக்கள் உங்களை துரத்தி, துரத்தி தெருக்களில் அடிப்பார்கள்.

இந்த இடைத்தேர்தலில் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. ஆட்சி விரைவில் கவிழும் என்றார். இடைத்தேர்தலில் பாஜக கட்டாயம் 6 முதல் 7 தொகுதிகளை வெல்ல வேண்டும். அப்போது தான் பெரும்பான்மையான 117 என்ற மேஜிக் நம்பரை எட்ட முடியும்.