சென்னை:

ஜிஎஸ்டி தொடர்பாக மெர்சல் படத்தில் வெளியான வசனங்களையும், காட்சியையும் நீக்க கோரி தமிழக பாஜ தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த காட்சிக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து சமூக வலை தளங்களில் இப்பிரச்னை முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது.

சர்ச்சைக்குறிய வசனத்தை நீக்க சினிமா தயாரிப்பாளர் குழுவினர் முடிவு செய்துள்ளனர். எனினும் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. காட்சிகளை நீக்க கூடாது என்று திரை உலகினர் மெர்சலுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளனர். இதன் ஒரு கட்டமாக அவர்கள் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபட பாஜக தொடங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்து.

இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் ஒரு கிறிஸ்தவர் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அவரது வாக்காளர் அடையாள அட்டையை பாஜ தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவரது பெயர் ஜோசப் விஜய் என்று இடம்பெற்றுள்ளது.

முன்னதாக இப்படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி ஒரு கிறிஸ்தவர் என்று ஹெச்.ராஜா தெரிவித்தார். இதன் மூலம் இந்து அல்லாதவர்கள் பாஜக அரசை விமர்சனம் செய்ய உரிமை இல்லை என்ற கோணத்தில் அக்கட்சி செயல்படுகிறது. இந்துக்களுக்கு மட்டுமே பேச்சு உரிமை உள்ளது என்பது போன்ற கருத்தை ஹெச். ராஜா வெளிப்படுத்தி வருவதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.