மேற்கு உத்திரப்பிரதேச விவசாயிகள் பாஜக அரசுக்கு கடும் எதிர்ப்பு

சிசௌலி, உத்திரப்பிரதேசம்

விவசாயிகள டில்லி நகருக்குள் அனுமதிக்காத பாஜக அரசை அடுத்த முறை ஆட்சி செய்ய அனுமதிக்க மாட்டோம் என உ.பி. விவசாயிகள் கூறி உள்ளனர்.

உத்திரப்பிரதேச மாநிலம் மேற்குப் பகுதியில் உள்ளது சிசௌலி என்னும் ஊர். இந்திய விவசாயிகள் சங்கத்தை தொடங்கிய சௌத்ரி மகேந்திர சிங் இங்கு தான் பிறந்தார். இந்த ஊரை அங்குள்ளவர்கள் விவசாயிகளின் தலைநகர் என அழைக்கின்றனர். நேற்று முன் தினம் திடீரென இந்த ஊருக்கு பல விவசாயிகள் வந்தனர். ஏற்கனவே அழைப்பு விடுக்காத கூட்டம் ஒன்றை அவர்கள் நிகழ்த்தினர்.

அந்த கூட்டத்தில் குறிப்பாக கரும்பு விவசாயிகள் கலந்துக் கொண்டு தங்களுக்கு வர வேண்டிய நிலுவை தொகை வெகுநாட்களாக வராதது குறித்து வருத்தம் தெரிவித்தனர். இதற்கு முன்பு நடந்த கூட்டத்தில் விவசாயிகள் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2 வரை ஒரு பேரணி நடத்த திட்டமிட்டு அதன் படி டில்லிக்கு பேரணியாக சென்றனர். ஆனால் ராணுவ பாதுகாப்பு படை அவர்களை டில்லி நகருக்குள் அனுமதிக்க மறுத்து விட்டது.

இது குறித்து சங்கத்தின் செய்தி தொடர்பாளர் தர்மேந்திர மாலிக், “அந்த நேரத்தில் விவசாயிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்படுவதை தடுக்க நாங்கள் பொறுமையை கடைபிடித்தோம். ஆனால் அரசு எங்களின் முக்கிய இரு கோரிக்கைகளை ஏற்கவில்லை. அது எங்கள் மனதை இன்னும் உறுத்திக் கொண்டு இருக்கிறது.

பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி விட்டது. கரும்பு விவசாயிகளுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகை இன்னும் வரவில்லை. அதே போல விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை இன்னும் அளிக்கப்படவில்லை. விவசாயிகளின் நலன் குறித்து மத்திய பாஜக அரசு சிறிதும் யோசிப்பதில்லை.

எங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்க நாங்கள் டில்லிக்கு பேரணியாக சென்றோம். ஆனால் இந்த அரசு எங்கள பாதுகாப்பு படை மூலம் எங்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி விட்டது. டில்லியில் நுழைய எங்களை அனுமதிக்காத பாஜக அரசை நாங்கள் அடுத்த தேர்தலுக்கு பின் டில்லியில் ஆட்சி செய்ய அனுமதிக்க மாட்டோம்” என தெரிவித்துள்ளனர்.