சென்னை:

விக்கிரவாண்டி, நாங்குனேரி  இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்றும், அதிமுக வெற்றிக்கு பாஜக பாடுபடும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இட்டைத்தேர்தல்கள் வரும் 21-ந் தேதி நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் 12 வேட்பாளர்களும் நாங்குநேரியில் 23 பேரும் களத்தில் உள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சியின் கந்தசாமி, தமிழ் பேரரசு கட்சியின் கவுதமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நாங்குநேரியில் காங்கிரஸின் ரூபி மனோகரன். அதிமுகவின் நாராயணன், நாம் தமிழர் கட்சியின் ராஜநாராயணன் உள்ளிட்டோர் களம் காணுகின்றனர்.

இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தரப்பில், கூட்டணி கட்சிகளான தேமுதிக, தமாகா, சமக,  உள்பட சில கட்சிகளை சந்தித்து ஆதரவு கோரிய நிலையில், தமிழக பாஜகவுக்கு தலைமையில்லாத நிலையில், ஆதரவு கோருவதில் சிக்கல் நீடித்தது. இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர் ராவிடம் துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆதரவு கேட்டதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று அதிமுக தரப்பில் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் சென்று, அங்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆதரவு கோரினார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், விக்கிரவாண்டி- நாங்குநேரி தொகுதிகளில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு தருகிறது. இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக தேர்தல் பணியாற்றுவோம் என்றார்.