புதுடெல்லி: கடந்த 1984ம் ஆண்டு தேர்தல் தொடங்கி, இந்த 2019 தேர்தலில்தான், காங்கிரஸ் கட்சியைவிட, அதிக மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது பாரதீய ஜனதா.

பாரதீய ஜனதா கட்சி மொத்தம் 437 இடங்களில் வேட்பாளர்களை அறிவித்திருக்க, காங்கிரஸ் கட்சியோ, 423 இடங்களில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் சார்பாக, இன்னும் சில தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியிருந்தாலும், மொத்தத்தில் பாரதீய ஜனதாவின் எண்ணிக்கையைத் தாண்டுவதற்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில், பாரதீய ஜனதா முதன்முதலாக தனிப்பெரும்பான்மை பெற்றபோது, காங்கிரஸ் கட்சி அந்த தேர்தலில், எப்போதும் இல்லாத குறைந்த அளவாக வெறும் 44 இடங்களை மட்டுமே பெற்று, நாடாளுமன்ற எதிர்க்கட்சி அந்தஸ்தையே இழந்தது.

மிகப் பழமையான மற்றும் நாடெங்கிலும் அறிமுகமான கட்சி என்பதால், காங்கிரஸ் எப்போதுமே அதிக தொகுதிகளில் போட்டியிடும். ஆனால், பாரதீய ஜனதா மோடியின் காலத்தில்தான் தனிப்பெரும்பான்மை எண்ணிக்கையை சற்று தாண்ட முடிந்தது என்பதால், இப்போதுதான் அது காங்கிரசின் எண்ணிக்கையை சற்றே முந்தியுள்ளது.

காங்கிரசின் எண்ணிக்கை சற்று குறைந்ததற்கு, அக்கட்சி பல மாநிலங்களில் அமைத்துள்ள கூட்டணிகளும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

– மதுரை மாயாண்டி