சமீபகாலமாகவே தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேச்சுக்கள் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கின்றன. “நடிகர்களை நம்பி பா.ஜ.க. இல்லை”,  “ மக்கள் நல கூட்டணி தேர்தல் வரை நீடிக்காது” என்று தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கிறார். 

இந்த நிலையில் தமிழிசை சவுந்தரராஜனிடம் patrikai.com  இதழுக்காகக சில கேள்விகளை வைத்தோம்.

விஜய் - அஜீத் - தமிழிசை
விஜய் – அஜீத் – தமிழிசை

நேற்று மக்கள் நல கூட்டியக்கம் தேர்தல் கூட்டணியாக அறிவிக்கப்பட்டதுமே, அது தேர்தல் வரை நீடிக்காது என்றீர்களே.. ஏன்?

அந்த கூட்டியக்கம் ஆரம்பித்த சில நாட்களிலேயே ம.ம.க. வெளியேறியது. சிறுபான்மையினர் நலம் பேசும் அவர்களால் சிறுபான்மையினர் கட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. வெறும் விளம்பரத்துக்காக கூட்டணி என்கிறார்கள். அது நிலைக்கப்போவதில்லை. ஒரு வேளை இந்த கூட்டணியே இருந்தாலும், அது மறைமுகமாக ஓட்டைப் பிரிக்க உதவுமே தவிர வேறெந்த பயனும் கிடையாது.

பல கட்சிகளும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகின்றன. பாஜக என்ன வியூகம் வைத்துள்ளது?

தொகுதி வாரியாக மாநாடுகள் நடத்தி வருகிறோம். கட்சியின் அடிமட்ட கட்டமைப்பை உறுதிப்படுத்தும் வேலையில் கவனமாக இருக்கிறோம். தேர்தல் அறிக்கை தயாரிக்கும்பணியும் தொடங்கிவிட்டது. பீகார் தேர்தல் முடிந்தவுடன் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி இருவரும் தமிழகம் வருவார்கள் அது மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்கும். ஆக, தேர்தலுக்கு நாங்கள் தயார்.

தி.மு.க – அ.தி.மு.கவுடன் கூட்டணி இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். மேலிடத்தில் இருந்து வருபவர்களும் அந்த இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆனால் ஜெயலிதாவை பிரதமர் மோடி சந்தித்தார். கருணாநிதியை நேற்று பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்திருக்கிறாரே…

உடல் நலம் இல்லாமல் இருந்தார் என்பதால் ஜெயலலிதாவை பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தார். அதே போல பொன். ராதாகிருஷ்ணன், என்னுடைய இல்ல திருமண அழைப்பிதழ் கொடுக்கவே கருணாநிதியை சந்தித்தேன். இச்சந்திப்பில் எந்த ஒரு அரசியலும் பேசவில்லை என்று சொல்லிவிட்டார்.

இவை நட்பு ரீதியான சந்திப்புகள்தான்.  இதுதான்  அரசியல் நாகரீகம். இதனாலேயே கூட்டணி வைக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. பா.ஜ.க. தலைமையில் அணி உருவாகும்.

ஆனால் தமிழகத்தில் மூன்றாவது அணி என்பது எப்போதுமே வெற்றிகரமான அணியாக இருந்ததில்லை. நீங்கள் எப்படி..

வரலாறு என்பதே புதிய திருப்புமுனைகளைக் கொண்டதுதானே.. அப்படியோர் புது வரலாற்றை வரும் தேர்தலில் பாஜக படைக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க.வை மக்கள் முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள். அ.தி.மு.க.வும் தனது ஊழல் மற்றும் திறமையற்ற நிர்வாகத்தால் மக்கள் எதிர்ப்பை சம்பாதித்துவிட்டது. மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை பா.ஜ.க.தான் கொடுக்கும். ஆகவே மூன்றாவது அணி அல்ல.. பாஜக தலைமையில் முதல் அணி… முதல்தரமான அணி அமையும்.

 உங்கள் கூட்டணியில்  தே.மு.தி.தி.க., பா.ம.க. ஆகியவை இருக்கின்றனவா?

கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி கட்சிகளில் வைகோ பிரிந்துபோய்விட்டார். அதுபற்றி நாங்களும் கவலைப்படவில்லை. மற்றபடி  அந்த கூட்டணி அப்படியே தான் இருக்கிறது.

அன்புமணியை முதல்வராக ஏற்றால்தான் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி. இல்லாவிட்டால் மத்திய பாஜகவுடன் மட்டும் கூட்டணி என்கிற ரீதியில் ராமதாஸ் பேசுகிறார்..  பிறகு எப்படி கூட்டணி?

எல்லா கட்சியையும் போலவே பா.ம.க.வுக்கும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும், முதல்வர் பதவி வேண்டும் என்ற ஆசை இருக்கத்தானே செய்யும். அவர்கள் ஒரு தனி கட்சி. அவங்க கருத்தை அவங்க சொல்றாங்க.  (கொஞ்சம் யோசித்து   பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்கிறார். அப்படி செய்யாதீர்கள் என்று நாங்களும் கூறுகிறோம். ம்.. அவங்களும் கூட்டணியில இருந்தா நல்லதுதான். அதுக்காக வந்துதான் ஆகணும்னு அவங்களை வற்புறுத்தலை.

 தமிழகத்தில் தி.மு.க. அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் என்கிறீரக்ள். . ஆனால் பா.ஜ.க. ஆளும் ம.பி. மாநிலத்தில்  வியாபம் ஊழல், மத்திய அமைச்சர் சுஷ்மா மீது லலித்மோடிக்கு விவகாரத்தில் குற்றச்சாட்டு, கடலை மிட்டாய் ஊழல்.. இப்படி பா.ஜ.க, மீதும்  நிறைய ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதே..!

வியாபம் விவகாரத்தில் பா.ஜ.க, மீது எந்த தவறும் கிடையாது. அதனால்தான் ம.பி. தேர்தலில் மாபெரும் வெற்றியை பாஜக பெற்றது. அதே போல லலித்மோடியை வைத்து பாஜக மீது தவறான குற்றத்தை சுமத்தினார்கள். இது எதையும்  அதை மக்கள் நம்பமாட்டார்கள். 

மோடி பதவி ஏற்றதில் இருந்தே இந்துத்துவா சக்திகள் பலவித பிரச்சினைகளை கிளப்பி வருகின்றன. மாட்டுக்கறி விவகராமும் அப்படித்தான் என்ற விமர்சனம் இருக்கிறதே..

மாட்டுக்கறி விவகாரம் உட்பட எந்த விசயத்திலும் த்திய அரசுக்கோ பா.ஜ.க. கட்சிக்கோ தொடர்பு கிடையாது.  நம் 120 கோடி பேர் வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் ஏதாவது விவகாரம் செய்தால் அதற்கெல்லாம்  மத்திய அரசு பொறுப்பேற்க  வேண்டுமா?

திராவிட கட்சிகளை விஜயகாந்த் நம்பவில்லை என்றீர்கள். விஜயகாந்த் கட்சி பெயரிலும் திராவிடம் இருக்கிறது. அதும் திராவிட கட்சிதானே..

(சிரிக்கிறார்) வார்த்தைகளை வச்சு விளையாடாதீங்க. நான் சொன்னது திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளைத்தான். நான் சொன்னதன் அர்த்தம் எல்லோருக்கும் புரியும்.

நடிகர்களை நம்பி இல்லை என்று  சொல்லியிருக்கிறீர்கள். அந்த காலத்திலேயே சத்ருகன் சின்ஹா முதல் தற்போது ஸ்மிருதிஇராணி வரை நடிகர்கள் பா.ஜ.வில் இருக்கிறார்களே.. தவிர விஜய் போய் மோடியை சந்தித்தார். மோடி வீடு தேடி வந்து ரஜினியை சந்தித்தார்… 

தலைப்பு அப்படி போட்டுட்டாங்க.. உள்ள படிச்சி பார்த்தா   நான் சொன்ன கருத்து புரியும்.  ஸ்ருதிராணி வெறும் நடிகை மட்டுமல்ல. கட்சியின் அடிப்படை பணியிலிருந்து வந்தவர், மகளிர் அணி தலைவியாக பணியாற்றியவர். இப்போ   எம்.ஜி.ஆரை நடிகர் என்று மட்டும் சொல்ல முடியுமா.. அவர் எவ்வளவு பெரிய தலைவர்!

நான் வெறும் சினிமா கவர்ச்சியை மட்டுமே வச்சுகிட்டு அதன் மூலம் முக்கியத்துவம் பெருவதைத்தான் தவறு என்கிறேன்… அதோடு, திரையுலகில் இருந்து வருபவர்கள் என்பதற்காக அவர்களை மட்டுமே புரஜெக்ட் பண்றதைத்தான் சுட்டிக்காட்டுகிறேன்.  காங்கிரஸில் அதுதான் நடக்கிறது.

மற்றபடி நடிகர்களின் பாப்புலாரிட்டி கட்சி இன்னும் பரவலா மக்களிடம் செல்ல உதவும்.

எங்கள் கட்சிக்கு நடிகர்கள்  வந்தால் நிச்சயம் வரவேற்போம். அது அஜீத், விஜய் யாராக இருந்தாலும் சரி.. ! அன்போடு வரவேற்க தயாராக இருக்கிறோம்!  

பேட்டி: டி.வி.எஸ். சோமு