சிபிஐமூலம் பாஜக மிரட்டல்: அடிபணியுமா அதிமுக அரசு…

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் 2ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம்,  அதிமுகவிடம் அதிக இடங்களை பெற பாஜக நடத்தும் அரசியல் சதிராட்டம் என்று விமர்சிக்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை பெறும்நோக்கில், அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவே, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில்  அதிமுக பிரமுகரை தற்போது சிபிஐ கைது செய்து பாஜக தலைமைக்கு தனது விசுவாசத்தை காட்டியுள்ளது.

சிபிஐ-யைக் கொண்டு எதிர்க்கட்சிகளையும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் மிரட்டி வந்த பாஜக அரசு, தற்போது, கூட்டணி கட்சியான அதிமுகவையும் தனது வழக்கமான பாணியில் மிரட்டும் செயலை தொடங்கி உள்ளது.

பொள்ளாச்சி சம்பவம் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. இந்த பாலியல் சம்பவத்தில் ஆளுங்கட்சி உள்பட அரசியல் கட்சியினர் சம்பந்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவின. ஆனால், வழக்கை சிபிசிஐடி விசாரணை என்ற பெயரில் கண்துடைப்பாக அதிமுகஅரசு விசாரித்து வந்த நிலையில், எதிர்க்கட்சிகள், மாணவர்களின் போராட்டம் காரணமாக வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம்  உத்தரவிட்டது.

ஆரம்ப கட்டத்தில் சிபிஐ-யும் வேகமாக விசாரணையை தொடங்கியதுடன், குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. ஆனால், அத்தோடு கிடப்பில் போடப்பட்டு விட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில்,  தற்போது திடீரென, அதிமுக பிரமுகர் அருளானந்தம் சிபிஐ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருப்பது, சிபிஐ மத்திய பாஜக அரசின் ஏவல்துறை என்பது மீண்டும்  நிரூபிக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தொகுதிப்பங்கீடு விஷயத்தில் இரு கட்சிகளுக்கும் இடையேமோதல் போக்கு நீடித்து வருகிறது. பாஜக கேட்கும் தொகுதிகளை கொடுக்க அதிமுக முன்வராத நிலை ஒருபுறம் இருக்க, அதிமுககூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றி விட வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள் சிலர் குரல் கொடுத்து வரும் நிகழ்வுகளும் அரங்கேறி உள்ளன.

இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக தானாகவே வெளியேறினால் நல்லது என்ற நிலை ஏற்படுமா என  அதிமுக தலைமை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், பாஜகவுக்கு தமிழக மக்களிடையே வாக்கு வங்கி இல்லாத நிலையில்,  பாஜக தலைமையோ, ரஜினியை அரசியல் களத்தில் இறக்க முயற்சி மேற்கொண்டு வந்தது.  அவரது,  ஆதரவுடன் தமிழகத்தில் காலூன்றலாம் என நினைத்து அரசியல் பகடையை உருட்டி வந்தது. ஆனால், ரஜினி, உனக்கும் பெப்பே… உங்க அப்பனுக்கும் பெப்பே என அரசியலில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டதால், வேறுவழியின்றி அதிமுக காலடியில் மண்டியிடுவதை தவிரவேறு வழி இல்லாத நிலைக்கு பாரதியஜனதா கட்சி தள்ளப்பட்டு உள்ளது.

உண்மை நிலை இப்படி இருக்க, குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல தன்னை மிடுக்காக காட்டிக்கொள்ளும் பாஜக, தனது ஏவல் துறைகளைக்கொண்டு, அதிமுக ஆட்சியாளர்களுக்கு குடைச்சல் கொடுக்கும் வேலையைத் தொடங்கி உள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த பாஜகவுக்கு வெறும் 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் அதிமுக தரப்பில் அளிக்கப்பட்ட சில புள்ளி விவரங்கள் அடிப்படையில் அப்போது அந்த தொகுதிகள் ஏற்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்களின் ஏகோபித்த எதிர்ப்பு அலையால், அதிமுக கூட்டணி கூண்டோடு தோல்வியடைந்தது.

ஆனால் இந்த முறை சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுகவிடம் இருந்து 60 தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இது தொடர்பாக அமித்ஷா எடப்பாடியுடன் நேரடியாக பேசியதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், அதற்கு அதிமுக ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதுபோல, பாஜக நடத்திய வேல்யாத்திரைக்கும் அதிமுக அரசு அனுமதி மறுத்ததுடன், பல இடங்களில் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வந்தது. இதனால், அதிமுகமீது அமித்ஷா உள்பட பாஜக தலைவர்கள்  கோபமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாஜக அதிக தொகுதிகள் கேட்பதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து,  கூட்டணி கட்சிகளான பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும், தங்களுக்கும் பாஜகவுக்கு இணையான தொகுதிகள் வேண்டும் என குடைச்சல் கொடுத்து வருகின்றன.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், கூட்டணிகட்சியினரின் நெருக்குதல் காரணமாக,  கூட்டணி கட்சிகளுக்கே பெரும்பாலான தொகுதிகளை கொடுத்துவிட்டால், அதிமுகவின் நிலை என்னவாகும்.  இதனால், அதிமுக தலைமை தொகுதி பங்கீடு விஷயத்தில் கறாராக இருந்து வருவதாக கூறப்படுகிறது. பெரும்பான்மை பெரும் வகையிலான 130க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக தலைமை போட்டியிட முடீவு செய்துள்ளது.

அதிகபட்சமாக கூட்டணி கட்சிகள் அனைத்துக்கும்சேர்த்து,  100 தொகுதிகளுக்கு உள்ளேயே கொடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், அதிகபட்சமாக பாஜகவுக்கு 25 தொகுதிகள் வரை ஒதுக்கலாம் என்று கூறப்பட்டதாக தெரிகிறது. இல்லையென்றால், தேர்தல் அறிவிக்கட்டும் தொகுதி பங்கீடு குறித்து பார்த்துக்கொள்ளலாம் என்று அறிவித்ததோடு, அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பெயரைஅறிவித்துவிட்டு, தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது.

மத்தியில் ஆளும் அரசான தங்களை அதிமுக மதிக்க மறுக்கிறதே என்ற கோபத்தில் குமுறும் பாஜக, தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை நாங்கள்தான் அறிவிப்போம், எடப்பாடியை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறி சலசலப்பை உருவாக்கி வருகிறது. ஆனால், பாஜகவின் அறிவிப்புகளையோ, பாஜக தலைவர்களின் பேச்சுக்களையோ அதிமுக தலைமை கண்டுகொள்ளாமல், தனது பிரசார பயணத்தை தீவிரப்படுத்தி வருகிறது.

இதனால் அதிமுக தலைமைமீது கடுமையான கோபத்தில் உள்ள பாஜக, எனது ஏவல் துறைகளில் ஒன்றான சிபிஐ-யை முடுக்கி விட்டுள்ளது.  அதன் விளைவே, தற்போது அதிமுக மாணவர் அணி செயலாளர் அருளானந்தம் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அதிமுக அமைச்சர்களில் அமைச்சர்கள் வேலுமணியும், தங்கமணியும்தான், அரசியல் தொடர்பான காய்களை நகர்த்தி வருகின்றன. அடிக்கடி டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து பேசுவதும்,  அதிமுகவில் அவ்வப்போது ஏற்படும் சலசலப்புகளையும் பேசி முடிவுக்கு கொண்டு வருபவர்கள். தற்போது, அருளானந்தம் கைது செய்யப்பட்டது மூலம் அமைச்சர் வேலுமணிக்கும் பாஜக தலைமை செக் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு அருளானந்தம் கைது செய்யப்பட்டுள்ளது, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதேவேளையில், அருளானந்தம், தமிழக அமைச்சர்கள் மட்டுமின்றி, கோவைக்கு வரும் மத்திய பாஜக அமைச்சர்களுடன் நெருக்கமான இருந்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்களு வைரலாகி வருகின்றன.

அருளானந்தம் கைதை திமுக உள்பட எதிர்க்கட்சிகள் தங்களது தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தத் தொடங்கி விட்டன. அதிமுக தலைமை, அருளானந்தத்தை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனால், பாஜக தலைமை, அருளானந்தத்தை கைது செய்து, தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை ஒதுக்காவிட்டால், நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம் என அதிமுக அரசை மிரட்டத் தொடங்கி உள்ளது.

தமிழக தேர்தல் களம் கொதிக்கத் தொடங்கி உள்ளது. விரைவில் மேலும் அதிரடி நிகழ்வுகள் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்..

பாஜகவின் மிரட்டலுக்க அடிபணியுமா அதிமுக அரசு… என்பது இன்னும்  ஓரிரு மாதங்களில் தெரிந்து விடும்…