சென்னை

முக ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் பி.டி .அரசகுமார் மீது நடவடிக்கை கோரி, தலைமைக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகத் தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிறன்று புதுக்கோட்டையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பெரியண்ணன் அரசு இல்லத் திருமண விழா நடைபெற்றது.  இவ் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன் மற்றும் பாஜக மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அங்குப் பேசிய அரசகுமார் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி குறித்து தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அவர், “நான் அன்று பார்த்ததில் இருந்து இப்போது வரை ஒரே மாதிரி உடற்கட்டுடன் இருக்கும் தலைவர் முக ஸ்டாலின் ஸ்டாலின்தான். உண்மையாகச்  சொல்வதென்றால் எம்ஜிஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்.

யார் யாரையோ இப்போது அடுத்த முதல்வர் என்கிறார்கள்.  ஆனால்  அதே வார்த்தையை நாம் ஸ்டாலினுக்குப் பயன்படுத்த வேண்டாம். அவர்  பல்லாண்டு காலமாக அந்தப் பதவிக்கு அருகில் இருந்தும் அதை முறைகேடாக அடைய நினைக்காதவர் ஆவார்.

அவர் தாம் ஜனநாயக வழியில் முதல்வர் ஆக வேண்டும் என்பதை மட்டுமே விரும்புவதால்  அதற்காகக் காத்திருக்கிறார்.   வெகு விரைவில் அதற்கான காலம் கனிந்து  ஸ்டாலின் தமிழகத்தின் அரியணை ஏறுவார்.” என உரையாற்றினார்

இதற்காக பி.டி .அரசகுமார் மீது நடவடிக்கை கோரி, கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகத் தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் , “அரசகுமாரின் பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறிய செயல் ஆகும்.   மு க  ஸ்டாலின் முதல்வராவார் எனக்கூறிய பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை கோரி தேசிய தலைமைக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அந்த கடிதத்துக்குத் தேசிய தலைமையிடம் இருந்து பதில் வரும் வரை பி.டி.அரசகுமார் கட்சி சார்பில் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக் கூடாது; கட்சி கூட்டங்கள், ஊடக விவாதங்களிலும் கலந்து கொள்ளக்கூடாது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.