டில்லி

விதி எண் 370 ஐ நீக்கியதன் மூலம் பாஜக இந்திய அரசியலமைப்பு சட்டத்தைக் கிழித்து விட்டதாக பி டி பி கட்சியின் மக்களவை  உறுப்பினர் நசீர் அகமது லாவே தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த விதி எண் 370ஐ நேற்று பாஜக அரசு விலக்கிக் கொண்டது. இது எதிர்க்கட்சியினருக்கு கடும் அதிருப்தி அளித்துள்ளது. காஷ்மீர் மாநிலக் கட்சியான பிடிபி (மக்கள் ஜனநாயகக் கட்சி)யின் மக்களவை உறுப்பினர் நசீர் அகமதுலாவே செய்தியாளரைச் சந்தித்துள்ளார். அப்போது செய்தியாளரின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

அப்போது நசீர் அகமது லாவே, “மக்களுடைய கோபம் இயற்கையானது. மத்திய அரசு யாருடனும் இது குறித்து விவாதிக்கவில்லை. அரசு  அதன் விருப்பப்படிசெயல்படுகிற்து. நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆனால் பாஜக இது மக்களின் நீண்ட நாள் விருப்பம் எனக் கூறுகிறது. அத்துடன் மக்கள் மகிழ்ச்சி அடைந்ததாகத் தெரிவிக்கிறது. ஆனால் உண்மையில் மக்கள் கோபம் அடைந்துள்ளனர். ஆனால் அதை வெளியில் தெரிவிக்க முடியாத படி வீட்டுச் சிறையில் அவர்கள் பூட்டப்பட்டுள்ளனர்.

பாஜக தனது அதிகாரத்தின் மூலம் காஷ்மீர் மக்களைக் கூர்மையான கத்தியால் தாக்கி உள்ளது. மக்கள் அரசை எதிர்த்து என்ன செய்ய முடியும்? இன்று காஷ்மீர், நாளை மற்றொரு மாநிலம் என இந்நிலை தொடர உள்ளது. இது மக்களை ஒடுக்க மத்திய அரசு ஒரு வித ஆயுதமாகக் கருதி உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. நாங்களும் இந்தியர்கள் தான். எங்கள் குறைகளைக் கேட்டிருக்கலாம்.

இதே போல் நிலை பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் நடந்துள்ளது. ஆனால் காஷ்மீரில் மட்டும் மக்கள் நம்பிக்கைக்கு அரசு துரோகம் செய்துள்ளது.  நாங்கள் அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக அரசியல் மூலமாகவும் மற்ற வழிகளின் மூலமாகவும் போராட உள்ளோம்.

நாங்கள் காஷ்மீர் மாநிலத்துக்குச் சென்று மத்திய அரசை எதிர்த்துப் போராட மக்களை ஒன்றிணைக்க வேண்டி உள்ளது. காஷ்மீரில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் இணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். காஷ்மீர் மாநில நிலைமை மேலும் சீர் கெடுவதற்குள் இந்த வழக்கு தொடர வேண்டும்.

நாங்கள் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தைக் கிழித்து எறிந்ததாக பலரும் குறை கூறுகின்றனர். நாங்கள் கிழித்தது புத்தகம் மட்டுமே. ஆனால் பாஜக அரசு  அரசியலமைப்பு சட்டத்தையே கிழித்து எறிந்துள்ளது. எங்களைப் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே நாடாளுமன்றத்தில் பேச உரிமைகள் அளிப்பதில்லை. அப்படி இருக்கக் காஷ்மீரில் உள்ள பொதுமக்களுடைய நிலை என்னவாக இருக்கும்?” என வினவி உள்ளார்.