தேர்தலில் வாக்குகள் பெறவே மசூத் விவகாரத்தை பேசுகிறது பாஜக! மாயாவதி குற்றச்சாட்டு

லக்னோ:

பாராளுமன்ற  தேர்தலில் வாக்குகளை பெறவே பயங்கரவாத தலைவன்  மசூத் அசார் விவகாரத்தை பாஜக பேசி வருகிறது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டினார்.

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப் பட்டு உள்ளார். ஏற்கனவே மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிக்க சீனா, பாகிஸ்தான் முட்டுக் கட்டை போட்டிருந்த நிலையில், புல்வாமா தாக்குதலை தொடர்ந்து ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தலைவர் மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வந்தது. அதையடுத்து மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா முறைப்படி அறிவித்தது. இதை பாஜக தலைவர்கள் பெருமிதமாக பேசி வருகின்றனர்.

இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியதாவது,

நாடாளுமன்ற  தேர்தல் நேரத்தில் தேசத்தின் பாதுகாப்பு குறித்து பாஜக தலைவர்கள் பெருமிதமாக பேசி வருகிறார்கள்… ஆனால், நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது  என்பதை மக்கள் அறிந்துகொண்டுள்ளனர். பயங்கரவா  தாக்குதல்களில்  பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பது அன்றாட சம்பவங்களாகி விட்டது என்று குற்றம் சாட்டினார்.

கடந்த பாஜக ஆட்சியின்போதுதான் மசூத் அசாரை விருந்தாளி போல் நடத்தியது. தற்போது வாக்குகளை  பெறுவதற்காக மசூத் அசார் பெயரை பாஜக பயன்படுத்தி வருகிறது… இது போலத்தான் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள்  தியாகத்தையும் பாஜக தேர்தலுக்காக பயன்படுத்தி வருகிறது. இது கண்டனத்துக்கு உரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி