பெங்களூரு:

காங்கிரஸ் தயவுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை உடைக்க பாரதிய ஜனதா முயற்சித்து வருவதாக குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அசாதாரணமான சூழல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் ம.த.ஜ. கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏக்களை இழுக்க பா.ஜ.க. முயன்று வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 12 பேர், ம.த.ஜ. எம்.எல்.ஏக்கள் இருவரை காணவில்லை. இந்த நிலையில் ம.த.ஜ. கட்சி தலைவர் குமாரசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “கோவா உள்ளிட்ட சில மாநிலங்களில் பெரும்பான்மை இல்லாமலேயே பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. அங்கெல்லாம் செய்த குதிரை பேரம் போலவே கர்நாடகத்திலும் செய்ய பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது.

நூறு கோடி ரூபாய் தருவதாகவும் அமைச்சர் பதவி தருவதாகவும் எங்கள் எம்.எல்.ஏக்களுக்கு பா.ஜ.க. ஆசைகாட்டுகிறது. இந்த கருப்பு பணம் எங்கிருந்து வருகிறது? அவர்கள் ஏழை மக்களின் சேவையார்களாக உள்ளனர், அவர்கள் இன்று பணம் கொடுக்கின்றனர். வருமான வரி அதிகாரிகள் எங்கே ?

இவ்வாறு அவர் கூறினார்.