இறந்த எம்பியை உயிரோடு இருப்பதாக காட்டிய பாஜக! : காங்., கம்யூ., பகீர் குற்றச்சாட்டு

டில்லி,
ட்ஜெட் தாக்கலின் போது இடையூறு ஏற்படாமல் இருக்க, இறந்துபோன கேரள எம்.பி.யை உயிரோடு இருப்பதாக காட்ட பிரதமர் அலுவலகம் நெருக்கடி கொடுத்துள்ளது என்று காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நேற்று பாராளுமன்றத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டை சுமத்தின.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் கடந்த 31-ந்தேதி துவங்கியது.

அவையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசிக்கொண்டு இருந்த போது, அமர்ந்திருந்த இந்தியன் முஸ்லீம் லீக் எம்.பி. அகமதுவுக்கு (வயது78) திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

அவர் உடனடியாக ராம் மனோகர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் பிப்.1ந் தேதி அதிகாலை மரணமடைந்தார்.

இதையடுத்து அவையை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரின. ஆனால், மத்தியஅரசு அதை ஏற்காமல், பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது.

இதற்கிடையே எம்.பியின் இறப்பு தெரிந்தால்,பட்ஜெட் தாக்கல் பாதிக்கும் என்பதால், தெரிய விடாமல் பிரதமர் அலுவகம் மருத்துவர்களுக்கு நெருக்கடி கொடுத்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றன.

மேலும், மறைந்த எம்.பி. அகமதுவைப் பார்க்க அவரின் குடும்ப உறுப்பினர்களையும் அனுமதிக்க வில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மக்களவை கூடியதும் காங்கிரஸ், இடது சாரி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் சார்பில் பேசிய மல்லிகார்ஜூன் கார்கே, “மனித நேயம் அற்ற வகையில், எம்.பி. அகமது வின் உடல், மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டு இருந்திருக்கிறது.  ஏறக்குறைய 7 மணி நேரம் வரை அகமதுவை பார்க்க அவரின் மகள், மருமனுக்கு அனுமதி கொடுக்கவில்லை.

பட்ஜெட்டுக்கு இடையூறு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே மத்திய அரசு இதுபோல நடந்து கொண்டிருக்கிறது.  ராம் லோகியா மருத்துவமனையில் அகமது இறந்தபின்னும் அவர் உயிரோடு இருக்கிறார் என்று சொல்லும்படி, மறைமுகமாக மருத்துவர்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது மத்திய அரசு” என்றார்.

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி எம்.பி. என்.கே.பிரேம சந்திரன் பேசுகையில், “இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற குழு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் ” என்று கோரினார்