ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஜெய்பூர்:

ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு சாட்டியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி குமாரசாமி கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. குமாரசாமி முதல்வராக இருந்தார். திடீரென காங்கிரஸ் கட்சியில் உள்ள சில எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. அதன்பின் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் சில எம்எல்ஏ-க்களுடன் வெளியேறினார். இதனால் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. பின்னர் சிவ்ராஜ் சவுகான் முதல்வராக பதவி ஏற்றார்.

இதேபோன்று தற்போது ராஜஸ்தானிலும் பண அதிகாரம் மூலம் ஆட்சியை கலைக்க முயற்சி நடக்கிறது. இதனால் விசாரணை நடத்த வேண்டும் என சட்டசபைக்கான காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா மாநில ஊழல் தடுப்பு அமைப்பில் புகார் அளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில சட்டசபை காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி மாநில ஊழல் தடுப்பு அமைப்பின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா போன்று ராஜஸ்தானிலும் எங்களுடைய எம்எல்ஏ-க்கள், எங்களுக்கு ஆதரவு தரும் சுயேட்சை எம்எல்ஏ-க்களை ஆசைவார்த்தை கூறி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நிலையற்ற தன்மையாக்க முயற்சி நடக்கிறது. எங்களுக்கு ஆதரவாக இருக்கும் எம்எல்ஏ-க்களை பண அதிகாரம் மூலம் இழுக்க முயற்சி செய்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

 

ராஜஸ்தானில் மூன்று மாநிலங்களவை இடத்திற்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இரண்டில் காங்கிரஸ் கட்சியும், ஒன்றில் பா.ஜனதாவும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பா.ஜனதா ஒருவருக்குப் பதிலாக இரண்டு பேரை களம் இறக்கியுள்ளது. ஒரு வேட்பாளர் வெற்றிபெற 51 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தேவை.

தற்போது வரை காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ள 12 சுயேட்சை வேட்பாளர்களை பா.ஜனதா இழுத்துவிட்டால், சிக்கல் ஏற்படும்.

காங்கிரசிடம் 107 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். இதில் ஆறு மாயாவதி கட்சியைச் சேர்ந்தவர்கள். கடந்த வருடம் இவர்கள் ஆதரவை விலக்கிக் கொண்டனர். 12 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் ஆரவு கொடுத்துள்ளனர். பா.ஜனதாவுக்கு 72 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். மேலும் கூட்டணி கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் என 6 பேர் ஆதரவு கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே குஜராத்தில் மாநிலத்தின் 19 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜஸ்தானில் உள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளனர். மாநிலங்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. இதில் சில எம்எம்ஏ-க்கள் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளனர். இன்னும் சிலர் ராஜினாமா செய்யவார்கள் எனத் தெரிகிறது.