புதுச்சேரி:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் குறுக்கு வழியில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற பாஜக முயற்சி செய்கிறது என்று புதுச்சேரி முதல்வர்  நாராயணசாமி கூறி உள்ளார்.

நாடு முழுவதும் லோக்சபா தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி உடன்பாடு குறித்து  நேரடியாகவும், திரைமறைவிலும் பேசி வருகின்றன.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி உள்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகள், மின் னணு வாக்குப்பதிவு முறை தேவையில்லை (evm), மீண்டும் பழைய முறையான வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், இன்று புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில், செவிலியர் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த முதல்வர்  நாராயணசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,   “தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளே தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை பின்பற்றி தேர்தலை சந்தித்து வருகின்றன.  காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தா லும் சரி வாக்கு சீட்டு முறையை பயன்படுத்த வேண்டுமென்பதில் தெளிவாக இருக்கிறது என்று கூறினார்.

மக்களின் வாக்குரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாக தெரிவித்த நாராயணசாமி, ஆனால் பாரதிய ஜனதா கட்சி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கிறது என்று  குற்றம் சாட்டினார்.