நாடெங்கும் உள்ள மாற்று மதத்தோரை விரட்ட பாஜக சதி: நெட்டிசன்கள் ஆவேசம்
டில்லி
நாடெங்கும் தேசிய குடியுரிமை பட்டியலை அமைக்க உள்ளதாக பாஜக தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் தேசிய குடியுரிமை பட்டியல் மசோதாவை மத்திய அரசு அறிவித்தது. இதன் படி வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறிய இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது நாடெங்கும் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் கடும் போராட்டத்தை ஏற்படுத்தியது.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்த மசோதா ஏற்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி அசாமில் பலர் தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் விருதுகளை திரும்ப அளித்தனர். இதன் விளைவாக எழுந்த கலவரம் காரணமாக இந்த மசோதா தள்ளிப் போடப்பட்டது.
இந்நிலையில் பாஜக இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “நாடெங்கும் தேநிய குடியுரிமை பட்டியலை அமுலாக்குவோம் என உறுதி அளிக்கிறோம். நாட்டில் சட்டவிரோதமாக நுழைந்த அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற்றுவோம். இந்துக்கள், புத்தர்கள் சீக்கியர்கள் தவிர மற்றவர்கள் வெளியேற்றப்படுவார்கள்” என அறிவித்துள்ளது.
We will ensure implementation of NRC in the entire country. We will remove every single infiltrator from the country, except Buddha, Hindus and Sikhs: Shri @AmitShah #NaMoForNewIndia
— BJP (@BJP4India) April 11, 2019
இதற்கு நெட்டிசன்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். அந்த பதிவின் பின்னூட்டத்தில் தங்கள் கோபத்தை தெரிவித்துள்ளனர். இது நாடெங்கும் உள்ள மாற்று மதத்தினரை விரட்ட பாஜக செய்யும் சதி என பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.