சென்னை: தமிழத்தில் அடுத்தஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவினர் வாக்குகளை பாஜகவுக்கு இழுக்கும் வகையில், காவி பூசிய எம்ஜிஆர் புகைப்படத்தைக்கொண்டு, பாஜகவினர் விளம்பரம் தேடி வருகின்றனர். இது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருந்தாலும்,  அவ்வப்போது அதிமுகவை வம்புக்கு இழுப்பதையும் பாஜக வாடிக்கையாக வைத்துள்ளது. அரசின் பல்வேறு நடவடிக்கைகளை விமர்சித்து வரும் பாஜக, அதிமுக முதல்வர் வேட்பாளர் விவகாரத்திலும் மூக்கை நுழைத்தது. இதற்கு அதிமுகவில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மாநில தலைவர் முருகன், முதல்வர் எடப்பாடியை சந்தித்து சமாதானப்படுத்தியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில்,  தற்போது அதிமுகவை நிறுவிய  மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான  எம்.ஜி.ஆர்.  புகைப்படத்தை பாஜக தேர்தல் சின்னமான தாமரை மற்றும் காவி கலருடன் இணைந்து பயன்படுத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாரதியஜனதா கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வெற்றிவேல் யாத்திரை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், எம்ஜிஆர் படம் பயன்படுத்தப்பட்டு  உள்ளது. அதில்,  பொன்மனச் செம்மலின் அம்சமாக மோடியை கண்டோமோடா என்ற வரிகள் ஒலிக்க, பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதற்கு அதிமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  

ஏற்கனவே கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போதே, அதிமுகவில் உள்ள எம்ஜிஆர் ரசிகர்களின் வாக்குகளை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.  சென்னையை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் என்ற இடத்தில் நடைபெற்ற பாஜக – அஇஅதிமுக – பாமக கூட்டணியின்  முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி,  றைந்த தமிழக முதலமைச்சரும், அஇஅதிமுக வின் நிறுவனருமான எம்ஜிஆரின் வாக்குகளை குறிவைத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ரயில் நிலையம்’ என்று அழைக்கப்படும் என்று அறிவித்ததுடன்,  எம்ஜிஆரையும், காமராஜரையும் வானாளவப் புகழ்ந்தார்.”எம்ஜிஆர் பிறந்த இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு நான் போயிருந்தேன். அங்கு போன முதல் பிரதமர் நான்தான்” என்று கூறியதுடன், இந்திரா காந்தியின் ஆட்சி யின்போது எம்ஜிஆரி ன் ஆட்சியும் 356 பிரிவை பயன்படுத்தி கலைக்கப்பட்டது என்று பேசி எம்.ஜி.ஆர். ரசிகர்களின் விசிலில் மயங்கினார்.

இந்த நிலையில், தற்போது சட்டமன்ற தேர்தலின்போதும் அதிமுகவில்உள்ள எம்ஜிஆரின்  வாக்குகளை பெறும் நோக்கில், எம்ஜிஆர் புகைப்படத்துடன் தேர்தல் பிரசாரத்தை பாஜக முன்னெடுத்துள்ளது.

பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து  குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன்,  அனைத்து மக்களும் எம்.ஜி,ஆரை போற்றுவார்கள். ஆனால் பிற கட்சிகள் எம்.ஜி.ஆர். புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என்று நாசூக்காக கண்டனம் தெரிவித்து உள்ளார். ஆனால், எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள் பாஜகவினர் எம்ஜிஆர் படத்தை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்,  எம்.ஜி.ஆரை போன்று நல்லது செய்து மக்களிடம் பிரதமர் மோடி ஆதரவு பெற்று வருகிறார், அதை உணர்த்ததேவ எம்ஜிஆர் படத்தை பயன்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில்,  ஆட்சியில் நீடிப்பதற்காக பாஜகவிடம் பவ்வியம் காட்டும் அதிமுக தற்போது எம்.ஜி,.ஆரையும் விட்டுக்கொடுத்து விட்டதா அல்லது எம்.ஜி.ஆரையும் பாஜக தட்டிப்பறித்து விட்டதா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டமன்ற  தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதிமுக நிறுவனரான  எம்.ஜி.ஆர். புகைப்படத்தை பாஜக பயன்படுத்துவது  கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.