தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜகதான் அறிவிக்கும்! எல்.முருகன் ‘காமெடி’

சென்னை: தமிழகத்தில், பாஜக கூட்டணி கட்சியில்  முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தலைமை அறிவிக்கும் என மாநில பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார்.  அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரசாரமும் தொடங்கியுள்ள  நிலையில், மாநில பாஜக தலைவரின் உளறல், சமூக வலைதளங்களில் காமெடியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், தமிழக பாஜக சார்பில், மாநிலத்தலைவர் எல்.முருகன் இன்றுமுதல்  பெரம்பலூர், அரியலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளை சந்தித்து பேசுகிறார்.

முதல்நாளாக இன்று  பெரம்பலூர் மாவட்டம் குன்னம், அரியலூர் மாவட்டம் டி.பலூர், தஞ்சாவூர் மாவட்டம் திப்பிராஜபுரம், அம்மாபேட்டை, இரும்புத்தலை, கள்ளபெரம்பூர் பகுதியில் விவசாயிகளை எல்.முருகன் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை பாஜக அறிவிக்கும் என்று கூறியதுடன், அதிமுக  முடிவு செய்தாலும், அதை பாஜகத்தான் அறிவிக்கும் என்று கூறினார்.

அதிமுகவில் ஏற்கனவே முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என முடிவு செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இன்று முதல்வர் எடப்பாடியும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், எல்.முருகனின் முதல்வர் பேச்சு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக உள்ள நிலையில், பாஜக கேட்கும் தொகுதிகளை அதிமுக ஒதுக்குமா என்பதே சந்தேகத்துடன் உள்ள நிலையில், எல்.முருகன் அதிமுக தலைவர் போல, முதல்வர் வேட்பாளரை தங்களது கட்சிதான் அறிவிக்கும் என கூறியிருப்பது, கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

எல்.முருகன் நாளை  (20-ந்தேதி)  காலை தஞ்சாவூரில் நடைபெறும் விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இநத் கூட்டத்தில்  மத்திய மந்திரி வி.கே.சிங் பங்கேற்கிறார். அன்றே ஒரத்தநாடு, தலையாமங்கலம், திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை, விக்கிரபாண்டியம் பகுதியில் கூட்டம் நடைபெறுகிறது.

21-ந்தேதி திருவாரூர் மாவட்டம் தில்லை விநாயகம், நாகை மாவட்டம் மருதூர், கீழையூர், கொள்ளிடம் பகுதியில் விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் எல்.முருகன் பங்கேற்கிறார்.