டில்லி

பாஜக கொண்டு வந்த 10% இட ஒதுக்கிட்டினால் பாஜகவே பாதிப்பு அடையும் என ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறி உள்ளார்.

பாஜக அரசு சமீபத்தில் புதிய இட ஒதுக்கீடு மசோதா ஒன்றை அறிவித்தது.   அதன்படி இட ஒதுக்கீடு இல்லாத பொதுப் பிரிவினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது.    இந்த மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

இதற்கு ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் முன்னாள் பீகார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர், “மோடியின் பாஜக அரசு பல முடிவுகளை அவசர அவசரமாக எடுத்து வருவதால் மக்கள் கடும் துயரடைந்துள்ளனர்.   உதாரணமாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை இவ்வாறு அவசரமாக எடுக்கப்பட்டு மக்கள் அவதி அடைந்தனர்.

தற்போது 10% இட ஒதுக்கீட்டு சட்டத்தை அதே முறையில் அமுல்படுத்தி உள்ளது.   இட ஒதுக்கீட்டின் மூலம் வறுமையை ஒழித்து விட முடியாது.    இந்த இட ஒதுக்கீட்டு சட்டத்தை எந்த ஒரு ஆணைய அறிக்கை அல்லது கணக்கெடுப்பின் மூலம் விவரங்கள் சேகரிக்காமல் அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறு இட ஒதுக்கீட்டை அமுல் படுத்த பல விவரங்களை அரசு சேகரிக்க வேண்டும்.   ஆனால் அவை எதுவும் இல்லாமல் ஏழை மக்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை அரசு அறிவித்துள்ளது.   ஏற்கனவே 50% இட ஒதுக்கீடு உள்ளதால் பொதுப் பிரிவில் உள்ளவர்களிடம் இருந்து மேலும் 10% பறிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெரும்பான்மை மக்களான பொதுப் பிரிவினர் தாங்கள் ஏமாற்றப்படுவதாக உணர்கின்றனர்.  இந்த இட ஒதுக்கீடு தேவை என எந்த கோரிக்கையும் வராத போது இது அமுல் படுத்தப்பட்டுள்ளதால் பொதுப் பிரிவினர் பாஜகவின் மேல் கோபம் அடைந்துள்ளனர்.  வரும் மக்களவை தேர்தலில் இது பாஜகவை கடுமையாக பாதிக்கும்” என தெரிவித்துள்ளார்.