பாட்னா

ந்தி பேசும் மாநிலங்களில் பாஜக இந்த தேர்தலுக்கு பிறகு முழுமையாக அழிந்துவிடும் என பிரபல நடிகரும் மூத்த அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா கூறி உள்ளார்.

பிரபல நடிகரான சத்ருகன் சின்ஹா முதலில் பாஜகவில் இருந்தவர் ஆவார். இவர் வாஜ்பாய் அரசில் அமைச்சராக பதவி வகித்துள்ளார். பாட்னா சாகிப் மக்களவை தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்றவர் ஆவார். இவருக்கு இம்முறை அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை. அத்துடன் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் இவருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

சத்ருகன் சின்ஹா தொடர்ந்து பாஜக அரசு செய்து வந்த தவறுகளை சுட்டிக் காட்டியதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இவர் மோடி மீதும் அமித் ஷா மீதும் பல குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். இவருக்கு இருவரும் பதில் ஏதும் அளிக்கவில்லை. சமீபத்தில் இவர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் பாட்னா சாகிப் தொகுதியில் இவர் போட்டியிட்டு வருகிறார்.

சத்ருகன் சின்ஹா நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, “பாஜகவில் தற்போது ஜனநாயகம் என்பதே கிடையாது. அந்த கட்சியில் இருவர் சேனையும் ஒருவர் நாடகமும் மட்டுமே உள்ளது. இதனால் மக்கள் மிகவும் வெறுப்பு அடைந்துள்ளனர். பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்புழப்பு, ஜிஎஸ்டி அமுலாக்கம் போன்றவைகளால் வெறுப்படைந்த மக்கள் இந்த தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

இந்தி பேசும் மாநிலங்களான உத்திரப் பிரதேசம், பீகார்,மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக மீது மக்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். அந்த அதிருப்திய அவர்கள் தேர்தலில் காட்டுவார்கள். இதனால் இம்மாநிலங்களில் பாஜக முழுவதுமாக அழிந்து விடும். இந்த தேர்தலில் மோடி அலை என்பது மோடி சுனாமி ஆகி பாஜகவை அழிக்கும்” என தெரிவித்தார்.