அதிமுக முதல்வர் வேட்பாளரை பாஜக முடிவு செய்யும் : எல் முருகன் அதிரடி

சென்னை

ரும் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக  கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக முடிவு செய்யும் என பாஜக தலைவர் முருகன் கூறி உள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் அணிகளும் அதிமுக மற்றும் பாஜக அணிகளும் போட்டியிட உள்ளன.   இதில் அதிமுக கூட்டணியில் ஒவ்வொரு தலைவர்களும் வேறு வேறு விதமாக அறிக்கைகள் வெளியிட்டும், கருத்துக்கள் தெரிவித்தும் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போது பாஜக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜக தமிழக கிராம விவசாயிகள் சந்திப்புக்களை நிகழ்த்தி வருகிறது.  இந்த சந்திப்புக்களுக்கு ‘விவசாயியின் நண்பன் மோடி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இந்த நிகழ்வுகளின் ஒரு பகுதியாகத் தஞ்சை மாவடத்தில் உள்ள ஒரு சிற்றூரில் பாஜக மாநிலத் தலைவர் எல் முருகன் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது/

கூட்ட முடிவில் முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பில்,ம் “பாஜக ஏற்கனவே உள்ள கூட்டணியைத் தொடர்கிறது.   இது குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரையும் துணை ஒருங்கிணைப்பாளரையும் அமித்ஷா  சந்தித்துள்ளார். அதை ஒட்டி அவர்கள் இருவரும் நாடாளுமன்றக் கூட்டணி வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் தொடரும் என அறிவித்துள்ளனர்.

இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு கடும் தோல்வி ஏற்படும். அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் யாருடைய தலைமையின் கீழ் சட்டப்பேரவை தேர்தலைச் சந்திப்பது என்பதை பாஜக தலைமை முடிவு செய்யும்.  அத்துடன் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதையும் பாஜக தலைமை முடிவு செய்து அறிவிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.