ஒளரங்காபாத்: மராட்டிய மாநிலத்தில் அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில், பாரதீய ஜனதா ஆட்சியமைக்கும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றும் கூறியுள்ளார் பாரதீய ஜனதா மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ராவ்சாஹேப் தான்வே.

ஒளரங்காபாத்தில் கட்சி நிர்வாகிகளிடையே, சட்ட மேலவை தேர்தல் தொடர்பாக பேசிய ராவ்சாஹேப் தான்வே இதைத் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, “மராட்டியத்தில் நமது அரசை அமைக்க முடியாது என்ற முடிவுக்கு கட்சித் தொண்டர்கள் வந்துவிட வேண்டாம். அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்குள் இந்த மாநிலத்தில் நாம் ஆட்சியமைப்போம்.

அதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம். தற்போது, இந்த சட்ட மேலவைக்கான தேர்தல் முடிவதற்காக காத்திருக்கிறோம்” என்றுள்ளார் அவர்.

தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரோடு இணைந்து, பாரதீய ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் அமைத்த அரசு(80 மணிநேர அரசு) கவிழ்ந்த ஓராண்டு நிறைவில் இதைக் கூறியுள்ளார் ராவ்சாஹேப் தான்வே. இவர் தற்போது ஜால்னா தொகுதி மக்களவை உறுப்பினராக இருக்கிறார்.