பாட்னா:

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை ‘ஸ்டெப்னி’ டயரை போல் தேவைக்கு மட்டுமே பாஜக பயன்படுத்தும் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகனுமான தேஜஸ்வி யாதவ் தி இந்து நாளிதழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘பீகார் அராரியா, ஜெகனாபாத் ஆகிய 2 தொகுதிகளும் எங்களது பாரம்பரிய தொகுதிகள் கிடையாது. சமயங்களில் வெற்றி பெற்றுள்ளோம். தோல்வியும் அடைந்துள்ளோம். ஆனால் இந்த முறை எங்களது வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தோடு இரு தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளனர். எங்களது வாக்கு வங்கியும் அதிகரித்துள்ளது.

மாநில மக்களின் மனநிலையை இந்த தேர்தல் முடிவு எதிரொலித்துள்ளது. இதேபோல் உ.பி. இடைத்தேர்தல் முடிவு மூலம் சிலரை மட்டுமே பாஜக.வால் முட்டாளாக்க முடியும், எல்லோரையும் முட்டாளாக்க முடியாது என்பது தெளிவாகியுள்ளது. இடைத்தேர்தல் வெற்றி மட்டும் போதுமானது கிடையாது. மேலும் உழைக்க வேண்டியுள்ளது. 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு விரைவில் தயாராவோம்’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘பொய் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைப்பு, மணல் குவாரிகள் மூடல், மதுவிலக்கு தடை சட்டம் மூலம் ஒரு லட்சம் பேர் கைது, வெள்ள பாதிப்பு நிவாரண விநியோக குளறுபடி, பீகாருக்கு நிதிஷ்குமார் சிறப்பு தொகுப்பு திட்டம் பெறாதது ஆகிய 5 காரணிகள் தான் இடைத்தேர்தல் வெற்றிக்கு காரணம்.

இதற்கு முன்பு லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டபோது எனது தாய் ராப்ரிதேவி ஆட்சி, கட்சி, 9 குழந்தைகளையும் வழிநடத்தினார். அவரை முன்னுதாரணமாக கொண்டு தற்போது எனது தந்தை இல்லாத சூழ்நிலையை சமாளிக்கும் வாய்ப்பை அளித்த நிதிஷ்குமாருக்கு நன்றி’’ என்றார்.

தொடர்ந்து தேஜஸ்வி கூறுகையில், ‘‘ நிதிஷ்குமார் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வளர்ச்சி அரசியல் செய்வதாக கூறிய அவரது கட்சி இடைத்தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது. 2019 மற்றும் 2020ம் ஆண்டு தேர்தலில் ஆர்ஜேடி, பாஜக.வை எதிர்த்து போட்டியிடும். நிதிஷ்குமாரின் கட்சி அழிக்கப்பட்ட ஒரு அமைப்பாக தான் தேர்தலில் இருக்கும். பீகார் நலன் கருதி கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜக.வுடன் கைகோர்த்ததாக அவர் கூறிய கருத்தை மக்கள் நிராகரித்துவிட்டனர். நிதிஷ்குமாரை ஒரு ஸ்டெப்னி டயராக தான் தேவையின் போது பாஜக பயன்படுத்தும்.

பாஜக எப்போதும் சொந்த செல்வாக்கு மூலம் தேர்தலில் வெற்றி பெறாது. மத வெறுப்பை பரப்புதல், ம க்களிடையே பிரிவினையை ஏற்படுத்துதல் போன்ற யுக்திகளை தான் கையாளும். இடைத்தேர்தல் தோல்வி க்கு பின்னர் அராரியா, பாகல்பூர், தர்பங்கா பகுதிகளில் மோதல் உருவாக்கும் முயற்சியில் மத்திய அமை ச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மக்கள் இதற்கு பலியாகமாட்டார்கள். 2019 தேர்தலில் பாஜக.வின் அனைத்து சதி திட்டங்களும் தோல்வி அடையும். எத்தனை காலம் தான் அவர்கள் பிரிவினைவாத அரசியலை மேற்கொள்வார்கள்’’ என்றார்.

‘‘கேம்பிரிட்ஜ் அனால்டிகா போன்ற மக்கள் தொடர்பு முகமைகள் உதவியுடன் தேர்தலில் வெற்றி பெறும் யுக்தியை பிரதமர் மோடியும், முதல்வர் நிதிஷ்குமாரும் தான் மேற்கொள்வார்கள். ஆர்ஜேடி.யுடன் இதர கட்சிகள் இணைய முன்வந்தால் பெரிய கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்கு தலைமை ஏற்க தயாராக இருக்கிறோம். அப்போது பிரதமர் வேட்பாளர் குறித்து கூட்டணி முடிவு செய்து கொள்ளும். தேர்தலுக்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சியும் பிரதமர் வேட்பாளர் குறித்த முடிவை எடுக்காது என்று நினைக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார் தேஜஸ்வி யாதவ்.