லக்னோ:

17வது மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றால், தேசத் துரோகச் சட்டம் மேலும் கடுமையாக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி முதல் கட்ட தேர்தல் 11ந்தேதி முடிவடைந்து உள்ளது. 2வது கட்ட தேர்தல் வரும் 18ந்தேதி நடைபெற உள்ளது. 3வது கட்ட தேர்தல் 23ந்தேதியும், 4வது கட்ட தேர்தல் 29ந்தேதியும் நடைபெற உள்ளது. குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் அனல் கக்கும் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் கட்ச்  மாவட்டத்தில் உள்ள காந்திதாம் நகரில்  நடைபெற்ற பாரதியஜனதா கட்சியின்  தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய  மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், கடந்த 5 ஆண்டுகளாக  மோடி தலைமையிலான பாஜக அரசு சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது என்று கூறியவர், பாஜக ஆட்சியில் ஊழல் வேறோடு அகற்றப்பட்டு இருப்பதாக கூறினார். (ரஃபேல் ஊழல் இல்லையா?)

தொடர்ந்து பேசியவர், காங்கிரஸ் கட்சி தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்வோம்  என்று கூறி வருகிறது… ஆனால் பாஜக அதை அனுமதிக்காது என்றவர்,  நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிப்பவர்களை நாம் மன்னித்து விட முடியாது என்றவர், மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேசத்துரோக சட்டத்தை மேலும் கடுமையாக்குவோம் என்று கூறினார்.