பெங்களூரு

பா ஜ க பொதுச் செயலாளர் முரளீதர் ராவ் காவிரி விவகாரத்தில் பாஜக கர்நாடகாவுக்கு எதிராக செயல்படாது என கூறி உள்ளார்.

தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நீர் பங்கீடு குறித்து பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.   உச்சநீதிமன்றம்  இது குறித்து அளித்த தீர்ப்பை செயல் படுத்த வேண்டும் என தமிழ்நாட்டில் பெரும் போராட்டம் நடந்து வருகிறது.    கர்நாடகம் இதை எதிர்த்து வருகிறது.   மத்திய பாஜக அரசு கர்நாடக தேர்தலை முன்னிட்டு கால அவகாசம் கேட்டுள்ளது

தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற மத்தியில் ஆளும் பாஜக இவ்வாறு சமாளித்து வருவதாக கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன.    இந்த கால தாமதத்துக்கு தமிழ்நாட்டில் அதிக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இன்று பாஜக வின் பொதுச் செயலாளர் முரளீதர் ராவ் பெங்களூருவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர், “மத்திய அரசு மற்றும் பாஜக காவிரி விவகாரத்தில் திருப்திகரமாக செயல்பட்டு வருகிறது.    மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒரு போதும் கர்நாடகாவுக்கு எதிராக செயல்படாது.   கர்நாடகாவை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் பாஜக எடுக்காது” என தெரிவித்துள்ளார்.

பாஜக செயலாளர் இவ்வாறு கர்நாடகாவுக்கு ஆதரவாக பேசியது தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பை உண்டாக்கி உள்ளது.