குட்டிகர்ணமே அடித்தாலும் தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாது! தா.பாண்டியன்

புதுச்சேரி:  குட்டிக்கர்ணமே போட்டாலும், தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் விடுதலை நாளை கொண்டாடும் விதமாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், டெபாசிட் வாங்காத கிரண்பேடியை ஆளுநராக நியமித்திருக்கிறது பாஜக அரசு. அவரை வைத்து மாநில அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறது.  பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி வழங்கும் திட்டத்துக்கு தடையாக இருக்கும் அவரை வேறு மாநிலத்திற்கோ அல்லது டெல்லிக்கோ மாற்ற வேண்டும்.

தமிழகத்தில் பாரதியஜனதா கட்சி கால் பதிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட வருகிறது. அவர்கள்  தொடர்ந்து என்ன செய்தாலும், ஏன் குட்டிக் கர்ணமே அடித்தாலும் அவர்களால் கால்  ஊன்றவும்,  முடியாது ஆட்சியை விலை கொடுத்து கூட வாங்க முடியாது.

 தமிழக பாஜக நடத்த உள்ள  வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை,  அவர்கள்  எங்கே சென்றாலும் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ள போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.