குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக முயற்சி செய்யாது: எடியூரப்பா

பெங்களூரு:

ர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சியை கலைக்க பாஜக முயற்சிக்காது என்று  பாஜக மாநில தலைவர் எடியூரப்பா கூறி உள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனததாதளம் தலைவர் குமாரசாமி தலைமை யில் மாநில ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களை வளைத்து, ஆட்சியைகவிழ்த்துவிட்டு, மீண்டும் அரியணை ஏற பாஜக முயற்சி செய்வது வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக வலையில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில பாஜக தலைவர் எடியூரப்பா,  கர்நாடகாவில் காங்.-மாஜத கூட்டணி ஆட்சியை கலைக்க பாஜக முயற்சிக்காது என்றும்,  ஆட்சியை பாஜக கவிழ்த்து விடுமோ என காங். -மஜத கவலைப்பட தேவையில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

கூட்டணி அரசை கவிழ்க்கும் நோக்கத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக கூறுகிறார்கள். இது உண்மைக்கு புறம்பானது. எங்கள் கட்சியில் 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.  கர்நாடகாவில் நிலவும் வறட்சியை ஆய்வு செய்யவே டெல்லியில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மேலும்,  நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 20 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்களின் ஒரே நோக்கம். இதற்காக நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். கூட்டணி அரசை கவிழ்க்க முயற்சி செய்வதாக தேவை இல்லாமல் எங்கள் கட்சி மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

பிற கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை இழுப்பது என்பது காங்கிரஸ் கலாசாரம் ஆகும். இது எங்களுடையது அல்ல.  4 எம்.எல்.ஏ.க்கள் அவர்கள் கட்சி  கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். இதன் மூலம் காங்கிரசில் ஒற்றுமை இல்லை என்பதும், கருத்து வேறுபாடு இருக்கிறது என்பதும் தெளிவாக தெரிகிறது. காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் நிலவும் குழப்பத்திற்கு பா.ஜனதா பொறுப்பல்ல.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

கார்ட்டூன் கேலரி