புதுடெல்லி: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, அயோத்தி வழக்கை விசாரிக்கையில், ராமனின் சந்ததியினர் தற்போது யாரேனும் இருக்கிறார்களா? என்று ஆர்வம் காரணமாக கேட்டிருந்த நிலையில், தனது குடும்பம் ராமனின் சந்ததிகள்தான் என்று உரிமை கோரியுள்ளார் பாரதீய ஜனதாவின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சாமண்ட் என்ற தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருக்கும் தியா குமாரி, ஜெய்ப்பூர் முன்னாள் அரச குடும்பத்தின் உறுப்பினர். அவர்தான் இவ்வாறு உரிமை கொண்டாடியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “ராமனின் வாரிசுகள் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிறார்கள். அதில் எங்கள் குடும்பமும் ஒன்று. நாங்கள் ராமனின் மகன்களில் ஒருவராகிய குசனின் வாரிசுகள். இதனைக் கூறிகொள்வதில் நாங்கள் பெருமையடைகிறோம்.
இதை நான் ஏதோ ஒரு நோக்கத்திற்காக கூறவில்லை.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் நாங்கள் எந்த உரிமையும் கோரவில்லை. அதுதொடர்பான சட்டப் போராட்டத்தில் நாங்கள் பங்கேற்கவும் விரும்பவில்லை. இதை எந்த நோக்கமுமின்றி இதயத்தின் குரலாகவே கூறுகிறேன்” என்றுள்ளார்.