மோடியிடம் கேள்வி கேட்டவர் மன்னிப்பு கேட்டது மிரட்டலாலா?

புதுச்சேரி

வீடியோ நேர்காணலில் பிரதமர் மோடியை கேள்வி கேட்டவர் மன்னிப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்ற மாதம் 19 ஆம் தேதி பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரென்சிங் மூலம் நேர்காணல் நடத்தினார். அப்போது புதுச்சேரியை சேர்ந்த நிர்மல்குமார் ஜெயின் என்பவர் நடுத்தர மக்கள் வரி விதிப்பால் கடும் துயருறுருவதாகவும் அவர்கள் துயரை போக்க என்ன நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ள்து எனவும் கேள்விகள் எழுப்பினார். இந்த கேள்விக்கு மோடி பதில் சொல்ல திணறியதாகவும் “விடுங்கள். புதுச்சேரிக்கு வணக்கம்” என கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதன் பிறகு மோடியிடம் இவ்வாறு நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளை 48 மணி நேரம் முன்பே வீடியோ பதிவாக்கி அனுப்ப வேண்டும் என பாஜக பொறுப்பாளர்கள் உத்தரவிட்டனர். இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் கிண்டல் செய்திருந்தார். அது தவிர பல ஊடகங்கள் மோடி தேர்வு எழுதி இருந்தால் அவர் 48 மணி நேரம் முன்பே கேள்விகளை தமக்கு அளிக்க சொல்லி இருப்பார் என செய்திகள் பதிந்தன.

இந்நிலையில் மோடியிடம் கேள்வியை கேட்ட நிர்மல்குமார் ஜெயின் என்னும் புதுச்சேரி தொண்டர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார், அவர் அந்த பதிவில் உள்ள வீடியோவில், “வணக்கம். நான் நிர்மல்குமார் ஜெயின். புதுச்சேரி பீஜேபியில் நீண்ட நாட்களாக இருக்கிறேன். 19.12.18 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களுடன் வீடியோ கான்ஃபரெனஸ் காலில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக பாரதப் பிரதமர் மோடிஜிக்கு நன்றி.

பாரதப் பிரதமர் மோடி நாட்டின் நலனுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். இதனால் மக்கள் மிகவும் சந்தோஷம் அடைந்துள்ளார்கள். எனது கேள்வி மூலம் மக்கள் நலனுக்கு மேலும் பல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று உணர்ச்சி வசப்பட்டு பேசினேன். அதற்கு நமது பாரதப் பிரதமர் சிரித்துக் கொண்டே எனது கேள்விகளை ஏற்றுக் கொண்டு நன்றி கூறி அனைத்ஹ்டு மக்களுக்கும் நன்மை தரும் திட்டங்களை நடத்துவதாக உறுதி அளித்தார்” என கூறி உள்ளார்.

அது மட்டுமின்றி தங்கள் உரையாடல் தவறாக பரப்பப் பட்டதாகவும் அதற்காக மோடியிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் செய்திகளில் வந்த தகவலின்படி மோடி எந்த பதிலும் கூறவில்லை என சொல்லப்படுகிறது. ஆகவே இவ்வாறு வீடியோ வெளியிடுமாறு அவர் மிரட்டப்பட்டிருக்கலாம் என ஊடகவியலாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.