தமிழக தேர்தலுடன் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ள மேற்கு வங்கத்தில் எட்டு கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது.

இங்கு பாஜக மற்றும் திரிணாமுல் கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது, தேர்தலில் வன்முறை ஏற்படுவதை தவிர்க்க மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு எட்டு கட்டமாக பிரித்து ஒவ்வொரு கட்டத்திலும் 35 முதல் 40 தொகுதிகளுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

மார்ச் மாதம் 27 ம் தேதி மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இங்கு தேர்தல் வேலைகள் அனல் பறக்க தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில் நேற்றிரவு சவுத் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஆரம்பூர் அருகில் உள்ள கோசபா பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து பாஜக தொண்டர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 6 பாஜக தொண்டர்கள் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் விசாரணையில் வெடிகுண்டு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது நடந்த விபத்தில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த வீட்டின் பின்புறத்தில் நாட்டு வெடிகுண்டுகள் குவியலாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கபட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் வன்முறையை ஏவிவிட பாஜக வெடிகுண்டுகளை தயாரித்ததாக கோசபா பகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயந்த் நஸ்கர் கூறினார். அதே நேரத்தில் அப்பகுதி பா.ஜ.க. தலைவர் பிஸ்வஜித் சித் திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு திருப்பிய எங்கள் கட்சி தொண்டர்கள் மீது வெடிகுண்டு வீசி தாக்கியதாக குற்றம் சாட்டினார்.