பெங்களூரு:

பிரதமர் நரேந்திரமோடி பிரிட்டன் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். சுற்றுப் பயணத்தின் போது லண்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மோடி பேசினார். அப்போது ‘‘பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களை அரசியலாக்க வேண்டாம்’’ என்று பேசினார்.

காஷ்மீர் மாநிலம் காதுவா சிறுமி பலாத்கார கொலை, உத்தரபிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் பலாத்கார கொலை ஆகிய சம்பவங்களை மோடி சுட்டிக்காட்டி பேசினார். அவர் பேசிவிட்டு நாடு திரும்பிய ஒரு சில நாட்களிலேயே பாலியல் பலாத்காரம், கொலை, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றை பாஜக.வினரே அரசியலாக்கும் செயல்பாடு நடந்துள்ளது.

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இங்கு பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. பாஜக சார்பில் இன்று சில நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

‘‘பாஜக.வுக்கு வாக்களியுங்கள்…மாற்றத்திற்காக வாக்களியுங்கள்’’ என்ற வாசகத்துடன் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அந்த விளம்பரத்தில்,‘‘ பாலியல் பலாத்காரம், கொலை, சட்டம் இல்லாத நிலை, உணர்ச்சியற்ற கர்நாடக அரசு’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் மோடி, அமித்ஷா, எடியூரப்பா ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் மோடியின் பேச்சை காற்றில் பறக்கவிட்டு பாலியல் பலாத்காரத்தை பாஜக.வினரே அரசியலாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்க்கது.

அதேபோல் மற்றொரு விளம்பரத்தில்,‘‘ பெண்களும், சிறுமிகளும் அச்சம் மற்றும் பதற்றத்தில் உரைந்துபோயுள்ளனர். சித்தராமையா அரசு ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது போல் பல விளம்பரங்களை பாஜக வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.