காஞ்சிபுரம்: பாஜகவின் மற்றொரு முகமே ரஜினிகாந்த் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.

காஞ்சிபுரம் நகர் ஓரிக்கையில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் எத்தனையோ பேர் இருக்கும் போது, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஒருவரை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ரஜினிகாந்த் நியமித்திருக்கிறார்.

உடல் நலம் சரியில்லை என்று சொன்னவர் திடீரென அரசியல் கட்சி தொடங்கியிருப்பது அச்சுறுத்தல் காரணமாக எடுத்த முடிவாகவே இருக்கும் என்று எண்ண தோன்றுகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ், சங்பரிவார் போன்ற சனாதன சக்திகளின் நெருக்கடியால் தான் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார். அதற்கான தேதியும் தெரிவித்திருக்கிறார்.

எனவே அவர் பாஜகவின் மற்றொரு முகமாக இருப்பார் என்றே சொல்லத் தோன்றுகிறது. உலகளவிலும், இந்தியாவே அதிரும் வகையில் தொடர்ந்து 10 நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.‌ ஒரு பெரிய யுகப் புரட்சியையே நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக வரும் 8ம் தேதி பாரத் பந்த் நடைபெறுகிறது.

பந்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது. வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதை வலியுறுத்தி வரும் 10ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை 60 % ஆக இருந்தது 10 % ஆக குறைந்து இருப்பது மாணவர்களின் கல்வி வளர்ச்சியை பெருமளவு பாதிக்கும் என்று கூறினார்.