பாலியல் வழக்கு: முன்னாள் மத்தியஅமைச்சர் சின்மயானந்திடம் 7மணி நேரம் விசாரணை!

லக்னோ:

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்தியஅமைச்சர் சின்மயானந்திடம் உ.பி. காவல்துறையினர் சுமார் 7 மணி நேரம் விசாரணை  நடத்தினர்.

மாணடிவி ஒருவர் தன்னை சின்மயானந்த் ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏங்றபடுத்தியது. இந்த புகாரில் மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வந்ததைத் தொடர்ந்து. உ.பி. மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட பலர் போர்க்கொடி தூக்கினர்.

இதைத்தொடர்ந்து, குற்றம்சாட்டபட்ட  முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்திடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் ஆசிரமங்கள், கல்வி நிறுவனங்கள் வைத்துள்ள சின்மயானந்தின் சட்டக் கல்லூரியில் சேர்ந்த மாணவி, தான் குளிக்கும்போது எடுத்த படத்தை வெளியிட்டுவிடுவதாகக் கூறி மிரட்டி, ஆதரவாளர்களால் துப்பாக்கி முனையில் மிரட்டி அழைத்து வரப்பட்டு ஓராண்டாக சின்மயானந்த் தன்னை பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாகவும், அதை தன் கண் கண்ணாடியில் கேமரா பொருத்தி பதிவு செய்ததாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த மாணவி திடீரென மாயமானார். அதேநேரம் உடல்நலத்தை காரணம் காட்டி, முன்னாள் மத்தியஅமைச்சர் சின்மயானந்த் விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்துவந்தார்.

காணாமல் போன மாணவியை கண்டுபிடிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்,  மாயமான மாணவி கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், உ.பி. போலீஸ் மீது நம்பிக்கை இல்லை என்று கூறப்பட்டது. உச்சநீதி மன்றத்தின் உத்தர வின் பேரில், செப்டம்பர் 3 ம் தேதி இந்த வழக்கை விசாரிக்க உத்தரபிரதேச அரசு ஒரு சிறப்பு குழுவை  அமைத்தது.

இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய சின்மயானந்த், தன்மீதான பாலியல்  குற்றச்சாட்டு களை நிராகரித்து, தன்னை  வீழ்த்த அரசியல் சதி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். அரசியல்வாதியை இழிவுபடுத்துவதற்காக அந்த பெண்ணும் அவரது நண்பர்களும் வெளியே வந்துள்ளதாகவும், தன்னிடம் இருந்து  பணம் பறிக்க விரும்புவதாகவும் அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் பூதாகாரமாக கிளம்பிய நிலையில்,  நேற்று மாலை சின்மயானந்த் விசாரணைக்கு ஆஜரானார். பூட்டிய அறைக்குள் அவரிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணை முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டது.  நேற்று மாலை 6.20 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை விசாரணை நடத்தப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.