காஷ்மீர்: பாஜக.வின் அதிரடி முடிவை கேட்டு மெஹபூபா முப்தி ஆச்சர்யம்

ஸ்ரீநகர்:

கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறிய தகவல் மெஹபூபா முப்திக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்று பிடிபி கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாஜக கூட்டணி முறிவை அறிவித்த சமயத்தில் மெஹபூபா தலைமைச் செயலகத்தில் கோப்புகளை பரபரப்பாக கையாண்டு கொண்டிருந்தார். இந்த தகவலை தலைமைச் செயலாளர் தான் மெஹபூபாவிடம் தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து தனது தனிச் செயலாளர் ஹஸ்மத் அலிகானை அழைத்த மெஹபூபா உடனடியாக 3 பிடிபி அமைச்சர்களை சேம்பருக்கு வரச் சொன்னார். முதலில் அப்துல் ரகுமான் வீரி வந்தார்.

இவரை தொடர்ந்து பல மூத்த அமைச்சர்கள் வந்தனர். நீண்ட ஆலோசனைக்கு பின்னர் குப்காரில் உள்ள வீட்டிற்கு மெஹபூபா புறப்பட்டுச் சென்றார். அமைச்சர்களும் உடன் சென்றனர். பின்னர் தனது ராஜினாமா கடிதத்தை பேக்ஸ் மூலம் கவர்னர் நரேந்திரநாத் வோஹ்ராவுக்கு மெஹபூபா அனுப்பிவைத்தார்.

கூட்டணி முறிவு குறித்த தகவல் வெளியான போது முதல்வர் அலுவலகத்தில் வடக்கு காஷ்மீர் எம்எல்ஏ ஒருவர் அங்கிருந்தார். அவர் கூறுகையில்,‘‘ முதல்வருக்கு இந்த தகவல் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அப்போது அவர் மிக பரபரப்பாக கோப்புகளை கவனித்துக் கொண்டிருந்தார். அரசை வெளியேற்றும் முடிவை பாஜக எடுக்கும் என்று அப்போது யாரும் நினைக்கவில்லை. அனைத்து வளர்ச்சி திட்டங்கள் குறித்த வாக்குறுதியை முதல்வர் எனக்கு அளித்தார்’’ என்றார்.

பிடிபி மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘திங்கள் கிழமை மாலை புரளி கிளம்பிய போதும் பிடிபி.யும், முதல்வரும் பாஜக.வின் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. அனைவருக்கும் இது பெரும் ஆச்சர்யமாக இருந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் மத்திய உள்துறை அமைச்சருடன் மெஹபூபா நீண்ட ஆலோசனை மேற்கொண்டார்’’ என்றார்.

அனைத்து பாஜக அமைச்சர்களும் டில்லிக்கு வருமாறு அமித்ஷா அவசர அழைப்பு விடுத்தார். அப்போது முதலே மாநிலம் முழுவதும் புரளி பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.