மும்பை: மராட்டிய சட்டசபை கூடவுள்ள நிலையில், அதன் இடைக்கால சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ளார் பாரதீய ஜனதா சீனியர் எம்எல்ஏ காளிதாஸ் கொலம்ப்கர்.

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிந்து இதுவரை உறுப்பினர் பதவியேற்கவில்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசு ராஜினாமா செய்துவிட்ட நிலையில், தற்போது உறுப்பினர்களின் பதவியேற்பு மட்டுமே எஞ்சியுள்ளது.

இடைக்கால சபாநாயகராக பாரதீய ஜனதாவின் காளிதாஸ் கொலம்ப்கர் மற்றும் காங்கிரசின் பாலாசாகேப் தோரத் ஆகிய இருவரில் யார் நியமிக்கப்படுவர் என்று கேள்வி எழுந்தது. ஏனெனில், இருவருமே சரிசம அளவில் சீனியர்கள்.

இதனையடுத்து, இதற்காக 6 பேர் அடங்கிய பட்டியலை மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிடம் அளித்தார் அம்மாநில சட்டசபை செயலாளர். எனவே, இதனடிப்படையில் பாரதீய ஜனதாவின் காளிதாஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார் ஆளுநர். இவர், இன்று கூடவுள்ள சட்டசபையில் புதிய உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.