பெங்களூரு

பாஜகவின் ஆட்சேபகரமான தேர்தல் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும்  மே மாதம் 12ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற உள்ளது.    காங்கிரசும் பாஜகவும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.  அனைத்துக் கட்சிகளும் செய்தித் தாட்கள், மீடியாக்கள், மூலமாக ஏராளமான விளம்பரங்கள் செய்து வருகின்றன.   இந்த விளம்பரங்களை மாநில ஊடக கண்காணிப்பு குழு கண்காணித்து ஆட்சேபகரமான விளம்பரங்களுக்கு தடை விதித்து வருகிறது.

சமீபத்தில் கர்நாடகா மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா பாஜக தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக புகார் செய்திருந்தார்.   அவர் பாஜகவின் விளம்பரங்கள் சிலவற்றை புகைப்படங்களாக எடுத்து தனது புகாருடன் இணைத்திருந்தார்.    அந்த விளம்பரங்களில் காங்கிரஸ் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறபட்டுள்ளதாக சுர்ஜிவால தெரிவித்திருந்தார்.

அரசு கர்நாடகாவின் அனைத்துப் பகுதிகளையும் நரகமாக மாற்றி விட்டது.

அரசு தேசிய வாதிகளின் படுகொலைகளை நிறுத்த தவறி விட்டது.

அரசு சமுதாயத்தை துண்டாக்கி விட்டது.

அரசின் “அன்ன பாக்யா” திட்டம் எதிர்காலத்தை திருடிவிட்டது.

அரசு போக்கிரித்தனத்தை ஆதரித்து வருகிறது.

அரசு விவசாயிகள் நலனை தியாகம் செய்து விட்டது

போன்ற குற்றச்சாட்டுக்களையும்  முதல்வர் போல் தோற்றமளிக்கும் நடிகர்கள் வாக்களிக்க மக்களுக்கு பணம் கொடுப்பது போன்ற போலி வீடியோக்களையும் அவர் சுட்டிக் காட்டி இருந்தார்.

இதை ஏற்றுக் கொண்ட மாநில ஊடக கண்காணிப்புக் குழு இந்த விளம்பரங்களை தடை செய்துள்ளது.

இந்த தகவலை ரந்தீப் சுர்ஜி வாலா தனது டிவிட்டர் பக்கத்தில் “வாய்மையே வெல்லும்” என வெளியிட்டுள்ளார்.