ராகுல் காந்தியின் கைலாஷ் யாத்திரை : பாஜகவின் பொய் அம்பலம்
டில்லி
ராகுல் காந்தியின் கைலாஷ் மானசரோவர் யாத்திரை குறித்து பாஜக பொய்தகவல் அளித்தது அம்பலமாகி உள்ளது.
தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரையில் உள்ளார். பாதுகாப்புக் காரணங்களுக்காக ராகுல் காந்தி செல்லும் பாதை மற்றும் அவர் தங்கும் இடங்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதனால் அவர் அங்கு செல்லவில்லை என பாஜக பொய்த்தகவல்கள் பரப்பி வருகிறது.
சமீபத்தில் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் மானசரோவர் ஏரியின் படத்தை பகிர்ந்துள்ளார். அத்துடன் அந்த பதிவில், “அமைதியான மானசரோவர் ஏரியில் நீர் மிகவும் தெளிவாகவும், சுத்தமாகவும் உள்ளது. யாரும் இதை பருகலாம். இதில் எந்த ஒரு விருப்பு வெறுப்பு இல்லை. அதனால் தான் நீரை கடவுளாக இந்தியாவில் வணங்குகிறோம்” என பதிந்திருந்தார்.
அதன் பிறகு ராகுல் காந்தி ராக்ஷஸ் தால் ஏரியின் படங்களை பகிர்ந்திருந்தார். அந்த பதிவில் “ராக்ஷஸ் தால் ஏரியின் அதிர வைக்கும் அழகு தோற்றம்” என பதிந்திருந்தார். இந்த இரு பதிவுகளும் பலராலும் பகிரப்பட்டு வைரலானது.
இந்த பதிவுகளைப் பற்றி பாஜக அனுதாபியான சிலர் தகவல்கள் பதிந்தனர். அதில் ஒருவரான விகாஸ் பாண்டே என்பவர், “ராகுல் காந்தி ஏன் கூகுளில் மானசரோவர் படத்தை தேடி எடுத்து பதிந்துள்ளார் ? அவர் உண்மையில் அங்கு இருக்கிறாரா அல்லது இன்னும் நேபாளத்தில் பன்றி மாமிசம் சாப்பிட்டுக் கொண்டுள்ளரா?” என பதிந்துள்ளார்.
அடுத்த பதிவில் ”எனது காங்கிரஸ் நண்பர்கள் எனது பதிவுக்கு பல திருத்தங்கள் அளிக்கின்றனர். அது குறித்து நான் ஆராய்ந்ததில் கிடைத்த படம் இதோ என ஒரு படத்தினை வெளியிட்டுள்ளார். அதை பகிர்ந்த பாஜக பெண்கள் அமைப்பை சேர்ந்த பிரீதி காந்தி, “ராகுல் காந்தி அவர்களே, நீங்கள் இணையத்தில் இருந்து படத்தை தேடி எடுத்து ஏன் பதிகிறீர்கள்? நீங்கள் உண்மையில் மானசரோவரில் இருக்கிறீர்களா அல்லது வேறு எங்காவது இருக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பி உள்ளார்
இது குறித்து காங்கிரசார் கூகுளை ஆராய்ந்துள்ளனர். அப்போது கூகுளில் தேடும் போது இந்த படங்கள் வந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் அந்த படங்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டரில் இருந்து எடுக்கபட்டதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் பாஜகவினர் வெளியிட்ட படங்களுக்கும் ராகுல் காந்தி வெளியிட்ட படங்களுக்கும் பல வேற்றுமைகள் இருந்துள்ளன.
இவ்வாறு ராகுல் காந்தி குறித்து பொய்த் தகவல்கள் பரப்பும் பாஜகவினருக்கு நெட்டிசன்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.