மும்பை:

2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக 110க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று சிவசேனா கணித்துள்ளது.

உ.பி. மாநிலம் கோரக்பூர் மற்றும் புல்பூர் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றது. இதில் ஆளுங்கட்சியான பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. ஏற்கனவே பாஜக.வை கடுமையாக விமர்சனம் செய்து வரும் கூட்டணி கட்சியான உத்தவ்தாக்கரே தலைமையிலான சிவசேனா இந்த தோல்வியையும் விமர்சனம் செய்துள்ளது.

இது குறித்து சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னா தலையங்கத்தில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பாஜக.வின் கோட்டையாக இருந்த கோரக்பூர், புல்பூரில் சமாஜ்வாடி இரட்டை வெற்றியை பெற்றுள்ளது. திரிபுரா போன்ற சிறு மாநில தேர்தல்களில் வெற்றி பெற்ற நிலையில் இந்த தோல்வி பாஜக.வுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

2014-ம் ஆண்டு தேர்தலில் பாஜக 282 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த எண்ணிக்கை மோடி, அமித்ஷா தலைமையில் தற்போது 272ஆக குறைந்துள்ளது. 2014க்கு பின்னர் நடந்த 10 லோக்சபா தொகுதி இடைத்தேர்தல்களில் 9ல் பாஜக தோல்வி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு உபி சட்டமன்ற தேர்தலில் 325 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கட்டுரையில், ‘‘அப்போது முதல்வராக யோகி ஆதித்யநாத், துணை முதல்வராக கேசவ் மவுரியா ஆகியோர் பதவி ஏற்றனர். 1991 முதல் கோராக்பூர் தொகுதிய யோகி இழந்தது கிடையாது. அவர் முதல்வராக இருக்கும் சமயத்தில் தொகுதியை கட்சி இழந்துள்ளது. திரிபுராவில் இடது சாரி ஆட்சியை வீழ்த்த முடிந்த பாஜக.வுக்கு ஏன் இந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியவில்லை?.

இதேபோல் பீகாரிலும் பாஜக ஒரு தொகுதியில் தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்வி அலை இப்படியே தொடர்ந்தால் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு 100 முதல் 110 தொகுதிகள் வரை மட்டுமே கிடைக்கும். 280 தொகுதிகளில் வெற்றி பெற முடியாது. இந்த தேர்தல் ரஷ்யா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளில் நடக்கப்போவதில்லை. அதனால் அப்போது பாஜக.வினர் தங்களது கால்களை தரையில் தான் வைத்திருக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.