சென்னை:

பாஜகவின் ஊதுகுழல் ரஜினிகாந்த், பாஜகவுக்கு பிரச்சினை என்றால் மட்டுமே நடிகர் ரஜினிகாந்த் கருத்துச் சொல்வார் என்று திமுக சென்னை மாவட்டச் செயலராளரும், எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன் காட்டமாக விமர்சித்து உள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தி திணிப்பு பேச்சு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாடு மட்டுமல்ல வட மாநிலங்களில் கூட இந்தியை பொதுவான ஒரு மொழியை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை தான் நமது நாட்டில் நிலவுகிறது எந்த நாடாக இருந்தாலும் பொதுவான ஒரு மொழி இருந்தால், அந்த நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கு நல்லது. ஆனால் துரதிஷ்டவசமாக நமது நாட்டில் பொதுவான ஒரு மொழியை அமல்படுத்த முடியாது என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பதில் அளித்துள்ள ஜெ.அன்பழகன் ரஜினிகாந்த் இன்னும் அரசியலுக்கே வரவில்லை என்று கூறியவர், பாரதிய ஜனதா கட்சிக்கு, எப்போதெல்லாம் பிரச்சினைகள் வருகிறதோ, அப்போதெல்லாம்,  பாஜகவுக்கு ஆதரவாக தன்னைக் காட்டிக்கொண்டு பேட்டி அளிப்பது வாடிக்கையானது என்று விமர்சித்து உள்ளார்.

மேலும், தமிழகத்தில் சொல்வது போன்ற கருத்துக்களை ரஜினி, கர்நாடகாவில் சொல்லவேண்டியதுதானே என்று கூறியவர்,  அங்குப் போய் சொல்லச்சொல்லுங்கள் என்றும், கர்நாடகாவிலும் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், அதிமுகவினர் பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியானது தொடர்பாக ரஜினிகாந்த் ஏதாவது சொன்னாரா? என்று கேள்வி எழுப்பியவர், அதற்கு பதில் சொல்லவில்லை….

ரஜினியின் இந்தி பற்றிய கருத்துதான் பாஜகவின் கருத்தும்..  அவர் கருத்து தெரிவிப்பது எல்லாமே பாஜகவுக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்று கூறிய அன்பழகன்,  ஏற்கனவே காஷ்மீர் தொடர்பாக கருத்து சொன்னார், தற்போது இந்தி தொடர்பாக கருத்து சொல்லி உள்ளார்.

தான் இந்திக்கு ஆதரவாக இல்லையா என்பதை மட்டும் அவரை சொல்லச் சொல்லுங்கள் என்றவர், ரஜினிகாந்த் பாஜகவின் ஊதுகுழலாக தான் செயல்பட்டு வருகிறார்.

இவ்வாறு ஜெ.அன்பழகன் கூறினார்.