தெலுங்கானா : பாஜகவின் ஒரே சட்டப்பேரவை உறுப்பினர் ராஜாசிங்

தராபாத்

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் ராஜாசிங் லோத் ஒருவர் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்.

நேற்று வெளியான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பாஜகவினருக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த பெரிய மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளது. தெலுங்கானாவை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் பாஜக யுவ தெலுங்கானா கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தது. அந்த கட்சிக்கு ஒரு இடம் அளித்தது போக மீதமுள்ள 118 இடங்களிலும் பாஜக போட்டி இட்டது. மொத்தத்தில் இது பாஜக தனித்து போட்டியிட்டதாகவே கருத வேண்டும் என தெலுங்கானா மாநில அரசியல் பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.

பாஜக போட்டியிட்ட 118 இடங்களில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளரும் இந்துத்வா ஆர்வலருமான ராஜா சிங் லோத் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். ராஜா சிங் தொகுதியான கோஷமகால் தொகுதியில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல பாஜக பிரபலங்கள் பிரசாரம் செய்துள்ளனர்.

இந்துத்வா ஆர்வலரான ராஜாசிங் லோத் மீத் 60 வழக்குகள் உள்ளன. அவற்றில் பல வழக்குகள் அவருடைய தவறான பேச்சுக்களை எதிர்த்து போடப்பட்டுள்ளன. ஐதராபாத் நகரின் பெயரை மாற்றப் போவதாக அவர் குறிப்பிட்டு பேசியது சமீபத்திய சர்ச்சைக்குரிய பேச்சாகும். அவருடைய இந்த கருத்தை உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தும் ஆதரித்து பிரசாரம் செய்துள்ளார்.